தமிழகத்தில் காங்கிரஸ்- தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் போன்றவர்கள்தான் தடுத்துவிட்டதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டி உள்ளார்.
நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று, ”மல்லிகார்ஜூன கார்கே பதவியில இருக்கும் வரைக்கும்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி இருக்கும் போல.. 2029 லோக்சபா தேர்தலை விஜய் கூடத்தான் ராகுல் காந்தி சந்திப்பாருன்னு சொல்றாங்கய்யா” என எழுதி இருந்தோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று பேசியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில இருந்து இன்னைக்கு இருக்க பொதுச் செயலாளர்கள், இன்னைக்கு இருக்க மாவட்ட நிர்வாகிகள் வந்து ஒரு 100 பேரு நம்ம ஆபீஸ்ல உட்கார்ந்துட்டு இருக்காங்க. ‘ உருப்படவே உருப்படாது காங்கிரஸ் கட்சி, நாங்க ஏதோ மாற்றங்கள் வரும்னு நினைச்சோம், ஆனா எல்லாம் ஏமாத்திட்டாங்க’ன்னு சொல்றாங்க..
காங்கிரஸில ரெண்டு குரூப் இருக்கு. ஒன்னு ராகுல் காந்தி சார் குரூப், அவரு தான் எதிர்கட்சி தலைவர். இன்னொன்னு குரூப் யாருன்னு சொல்ல வேணாம், வயசாகி கண்ணு தெரியாம, நடக்க முடியாத பழைய குரூப். அந்த குரூப் எப்பயுமே ‘திமுக திமுக திமுக’னு சொல்லிக்கிட்டே இருக்கும். ஏன்னா எல்லாம் கலெக்ஷன், செட்டிங், கமிஷன், எல்லாம் பார்ட்னர்ஷிப்.
பாண்டிச்சேரில நேத்து தான் நாமினேஷன் முடிஞ்சுது, நீங்களே பார்த்திருப்பீங்க டிவில. பார்த்தீங்களா இல்லையா? நாமினேஷன் முடியுற நாலு மணி வரைக்கும் கூட்டணியே பேசி முடிக்கல, இதெல்லாம் ஒரு கூட்டணியா? 75 வருஷ கட்சியாம் திமுக, இன்னொன்னு 100 வருஷ கட்சி காங்கிரஸாம். நாமினேஷன் முடியப் போகுது கூட்டணி முடியல. என்ன ஒரு அனுபவம் பார்த்தீங்களா இவங்களுக்கெல்லாம்?. எவ்வளோ பெரிய அனுபவம், எவ்வளோ பெரிய ஒற்றுமை, மதநல்லிணக்க கூட்டணி.
பாண்டிச்சேரில பிஜேபி ஜெயிக்கணும்ங்குறதுக்காகவே திமுக, காங்கிரஸை கடைசி வரைக்கும் அலைய வச்சு, கடைசி வரைக்கும் ஈவ்னிங் 3 மணி வரைக்கும் நாமினேஷன் முடியுற வரைக்கும் அந்த உடன்படிக்கையில சைன் போடாம பார்த்துகிட்டது.
நாம தைரியமா நிக்கிறோம். படத்த ரிலீஸ் பண்ணவிடலையா? நான் டெல்லி பக்கம் வந்தா நிமிர்ந்து நிப்பேன், சிபிஐ வாசல்ல நின்னுட்டு கை காமிச்சிட்டுப் போனாரு.
“சிபிஐ ஆபீஸ் கூப்புடுறியா? நான் வந்து நிக்கிறேன். முதல் என்கொயரியா ஒரு என்கொயரி கூட கேன்சல் பண்ணல, ஆப்சென்ட் ஆகல. வந்து நிக்கிறேன் உண்மையை சொல்றதுக்குன்னு நின்ன தலைவர் எங்க தலைவர்.
திமுகவை எதிர்க்கணும், டெல்லியில பிஜேபி எதிர்க்கணும்னா ஒரே உறுதியான தலைவர் இன்னைக்கு தமிழ்நாட்டிலேயே நம்முடைய தலைவர் விஜய் மட்டும்தான்.
பாண்டிச்சேரியில 4 மணி வரைக்கும் நாமிநேஷனைத் தாக்கல் பண்ணாம விட்டது எதனால? சொல்லுங்க மிஸ்டர் ஸ்டாலின் சார்.
பாண்டிச்சேரியில நீங்க என்ன ஆளுங்கட்சியா? உங்க கட்சிக்கு எத்தனை எம்எல்ஏ இருக்கு? காங்கிரஸ்தானே ஆளுங்கட்சியா இருக்கணும்? காங்கிரஸ்தானே அங்க பெரிய கட்சி? அவங்கதானே முதலமைச்சர் வேட்பாளர்?
அங்க நாராயணசாமின்னு ஒருத்தர் இருக்குறாரு, கேள்விப்பட்டீங்களா? கடைசில அவருக்கே நாமிநேஷன் பண்றதுக்கு ‘பி-பார்ம்’ கொடுக்கல டெல்லியில இருந்து.
|
நாராயணசாமிக்கு மக்கள் அரசியலே தெரியாது. மக்கள் கிட்ட போய் ஓட்டு வாங்குனதே கிடையாது. டெல்லி கிட்ட போய் செட்டிங் பண்ணிக்குவார் ஒரு குரூப்பா போயி.
ரெண்டு எலக்சன்ல கடும் தோல்வி அடைய வச்சிட்டாரு. அதனால்தான் இன்னைக்கு எலக்சன்ல அவருக்கு வாய்ப்பே கொடுக்கல. அந்த நாராயணசாமி என்ன பண்ணுவார்னா கண்ணு திறந்தாலும் திமுக, தூங்குனாலும் திமுகன்னு நம்பிக்கிட்டு இருந்தாரு. கடைசியில அந்த அதே நாராயணசாமியை கழுத்தறுத்து, 4 மணி வரைக்கும் திமுக ஏமாத்திருச்சு. இன்னைக்கு காங்கிரஸ் நடுரோட்டுல நிக்குது.
அதே மாதிரி தமிழ்நாட்டுல ஒரு நாராயணசாமி இருக்குறாரு. பேர் சொல்லுங்க யாருன்னு? காங்கிரஸ்ல இருக்காருப்பா ஒரு நாராயணசாமி இங்க… அவர் பேர்தான் ப. சிதம்பரம். காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்த நாராயணசாமி.
2026-ல ப. சிதம்பரம் காங்கிரஸை ஒழிச்சிட்டாரு. நேரா போய் அடமானம் வச்சு விட்டுட்டாரு. காங்கிரஸுடைய ஒட்டுமொத்தப் பொதுச் செயலாளர்களும் ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களும் இன்னைக்கு டிவிகே வாசல்ல உட்கார்ந்துட்டு இருக்காங்க.
காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லி சொல்லி 50 வருஷமா திமுக குதிரை மேல ஏறி உட்கார்ந்துகிட்டு ஒரு மாற்றம் வராதான்னு நினைச்சோம். நாங்க நினைச்சோம், நடக்கலை..
எங்க ராகுல் காந்தி சார் விஜய் மேல தான் அன்பு வச்சிருக்கார் இதுதான் உண்மை. நாங்க போய் கேட்டுட்டு வந்தோம். ஆனா இந்த பழைய வயசான குரூப் இருக்கே அவங்களாம் சூழ்ச்சி பண்ணி எதோ எதோ பேசி போய் அடமானம் வச்சிட்டாங்க… வாங்க வேண்டிய பெட்டியெல்லாம் வாங்கி அடமானம் வச்சிட்டாங்க.
எங்களுக்கு இந்த காங்கிரஸ் மேல நம்பிக்கையில்லன்னு 100 பேர் இன்னைக்கு வந்து நம்ம ஆபிஸ் வாசல்ல உக்காந்துட்டு இருக்காங்க.. விஜய்யை பாக்கணும்னு.. இன்னும் ரெண்டு நாள்ல காங்கிரஸ் கட்சியோட முக்கியமான நிர்வாகிகள் டிவிகே கட்சியில ஐக்கியமாக போறாங்க இதுதான் உண்மை.
எப்படி நாராயணசாமியை திமுக ஒழிச்சுச்சோ அதே மாதிரி ப. சிதம்பரத்துக்கு சீட்டே கிடைக்காது.. அவரும் காணாம போயிருவார். காங்கிரஸ் கட்சியையும் ஒழிச்சு அவரும் காணாம போயிருவார்.
இங்க ப.சிதம்பரத்த வச்சு தமிழ்நாடு காங்கிரஸ ஒழிச்சு விட்டாங்க. அதுக்கும் காரணம் திமுக தான். திமுகவுக்கு மதச்சார்பற்ற தன்மை கொண்ட கட்சிகள் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதுதான். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.
