காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை இன்று (பிப்ரவரி 10) அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது எனதெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மக்களவையில் பிப்ரவரி 4-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமரை சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு தான் கேட்டுக் கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து, அவை நடவடிக்கையை ஒத்திவைத்தார்.
மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் சபாநாயகர் குற்றம் சாட்டினார். சபாநாயகரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10) மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை நாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில் “காங்கிரஸ் கட்சி தனது எம்பிக்களின் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது. பாஜக எம்பிக்களைத் தடுத்து நிறுத்தாமல், காங்கிரஸ் பெண் எம்பிக்களை எதிர்கொள்ள அனுமதித்திருந்தால் அருவருக்கத்தக்க சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது” என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
