ஓம் பிர்லா அறையில் காங்கிரஸ் எம்பிகள் வாக்குவாதம் – வீடியோ வெளிட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

Published On:

| By Pandeeswari Gurusamy

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை தரக்குறைவாகப் பேசியதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகவும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிப்ரவரி 4-ஆம் தேதி மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக மோடி அவைக்கு வரவில்லை..இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை “நான்தான் அவைக்கு வர வேண்டாம் என்று கூறினேன்; அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்” என்று சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இருக்கையை ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிட்ட வீடியோவை சில தினங்களுக்கு முன் அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்பிக்கள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்றை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களும், அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜகவினரும் உள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து கிரண் ரிஜிஜு, “20 முதல் 25 காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவைத் தலைவர் அறைக்குள் நுழைந்து முறையற்ற வகையில் நடந்து கொண்டனர். நானும் அங்கு சென்று பார்த்தேன். பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர். அவைத் தலைவர் மிக மென்மையானவர். எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளால் அவர் வேதனையடைந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share