தேர்தல் பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக முதல்வரை நாளை அல்லது நாளை மறு நாள் சந்திக்கவிருப்பதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 70 க்கும் மேற்பட்டோர் இன்று (பிப்ரவரி 10) டெல்லி சென்றனர். அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எல்லோரும் மன நிறைவுடன் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறோம்.
வரவிருக்கும் தேர்தலில் மிகக் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி தவிர மற்ற அனைத்து 74 மாவட்டத் தலைவர்களும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். எங்களிடம் குழப்பம் இல்லை. இன்று எல்லோரும் பகிர்ந்துகொண்டது, தேர்தல் பணிக்குழு அமைக்கவில்லை என்று தான் எல்லோரும் சொன்னார்கள்.
கடைசி நேரத்தில் அவசரமாகப் பேச்சுவார்த்தை நடத்துவதை விட, இப்போதே முடிப்பதுதான் சரியாக இருக்கும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்து. தொகுதிப் பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு குறித்த தெளிவு கிடைத்தால் மட்டுமே அடுத்தகட்டப் பணிகளைத் தொய்வின்றி செய்ய முடியும்.
திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு எங்கள் கோரிக்கை என்னவென்றால் உடனடியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும். ஏனென்றால் தேர்தலில் அடுத்த கட்டத்திற்கு களத்திற்கு சென்றுவிட வேண்டும்.
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைக்காதது காங்கிரஸ் தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் வெளியே கூற முடியாது.
இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரை நாளை அல்லது நாளை மறுநாள் சந்தித்து காங்கிரஸ் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
