தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளருமான முகுல் வாஸ்னிக், குவாசி முகமது நிஜாமுதீன், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவர் சசிகாந்த் செந்தில்
ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய முகுல் வாஸ்னிக், தமிழகத்தின் 234 தொகுதிகளிலுமே காங்கிரஸ் போட்டியிடுவதாக கருதியே பணியாற்றுவோம் என்றார்.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், “திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக நிற்கிறது. எங்கள் கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தும்” என கூறியிருந்தார்.
இச்சந்திப்பு முடிந்து புறப்பட தயாரான நிலையில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நலமடைந்தார் கிரிஷ் சோடங்கர்.
