இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு என்று திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில்,
- அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது.
- 2010-ம் ஆண்டு உ.பி.யின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி.யைவிட 2 மடங்கு அதிகம்.
- இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
- கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது
- தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது என கூறியுள்ளார்.
இதற்கு திமுக முன்னாள் எம்.பி.யும் அயலக அணிச் செயலாளருமான எம்.எம்.அப்துல்லா அளித்த பதில்:
- தமிழ்நாட்டில் நிர்வாகம் நன்றாக இருப்பதால் தமிழகத்திற்கு உலகவங்கி கடன் தருகிறது.
- நிர்வாக மோசமான உத்திர பிரதேசத்திற்கு உலக வங்கி கடன் தருவதில்லை
- நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் தான் கடன் கிடைக்கும்
சிபில் ஸ்கோர் மோசம் என்பதால் கடன் கிடைக்காமல் இருப்பது வீரம் அல்ல - உத்திர பிரதேசத்திற்கு கடன் கிடைக்காததால் அவர்களுக்கு தமிழக வரியில் இருந்து பணம் அளிக்கப்படுகிறது
- தமிழகத்தில் வசூலிக்கப்படும் 2 லட்சம் கோடி வரியில் 58 லட்சம் மட்டுமே தமிழகத்திற்கு வருகிறது.
- தமிழகத்தில் இருந்து 1.62 லட்சம் கோடி இந்தி மாநிலங்களுக்கு செல்கிறது
- நமது வரி இந்தி மாநிலங்களுக்கு செல்வதால்தான் நாம் கடன் வாங்க வேண்டியுள்ளது
- தமிழக வரி தமிழகத்திற்கு மட்டும் என்றால் தமிழ்நாடு கடன் வாங்க வேண்டியதில்லை
- இந்தியா என்பது ஒரு நாடு. எனவே ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு உதவவேண்டும்.
- உதாரணமாக அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் நிறைய சம்பாதிக்கிறார். நல்ல சிபில் ஸ்கோர் வைத்துள்ளார்; தம்பி ஒழுங்காக வேலை செய்வதில்லை. வருமானம் இல்லை. மோசமான சிபில் ஸ்கோர் வைத்துள்ளார்; இப்பொழுது தம்பிக்கு ஒரு அவசரம் என்றால் அண்ணன் தனது பணத்தை அளித்து விட்டு, தனது தேவைக்கு கடன் வாங்குவார் அல்லவா? அது தான் இங்கும் நடக்கிறது.
- உத்திர பிரதேசத்தின் வருமானம் குறைவு என்பதால் அவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. தமிழகத்தின் வரி உத்திர பிரதேசத்திற்கு அளிக்கப்படுகிறது; தமிழகம் கடன் வாங்க வேண்டியுள்ளது. இதில் எதுவும் பிரச்சனை இல்லை. இந்தியா என்பது ஒரு நாடு. எனவே ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு உதவவேண்டும். ஆனால் அப்படி உதவும் போது
நன்றாக இருக்கும் மாநிலத்தை குறை சொல்வது மட்டும் தான் தவறு. இவ்வாறு எம்.எம். அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த விமர்சனத்தை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்று திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மயிலாடுதுறையில் போட்டியிட விரும்பினார். ராகுல் காந்தியுடன் நெருக்கமானவர் என்பதால் தமக்கு சீட் கிடைக்கும் என நம்பி, மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்கும் முன்னரே தேர்தல் அலுவலகம் திறந்து பணிகளை தொடங்கினார். ஆனால் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரவீன் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சுதா, வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் காங்கிரஸ் மேலிடம் அறிவித்த ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் பிரவீன் சக்கரவர்த்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பின்னணியில் தற்போது திமுக அரசு மீது ‘எதிர்க்கட்சிகளை’ போல காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
