‘ஆட்சியில் பங்கு’.. காங்கிரசில் ‘கலகக் குரல்’.. திருமாவளவன் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Thirumavalavan

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருவது குறித்து அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் எம்.பி. தமது கருத்த்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஒரு தேசியக் கட்சி. தேசியத் தலைமைதான் இறுதி முடிவு செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னணிப் பொறுப்பாளர்கள் சிலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்களே தவிர, அது இறுதியான முடிவு அல்ல. அது தேசியத் தலைமையின் வழிகாட்டுதலின்படி சொல்லப்படுகிற கருத்தாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, ராகுல் காந்தி அவர்கள் அல்லது அவரால் நியமிக்கப்படுகிற நேரடிப் பிரதிநிதிகள் திமுக தலைமையோடு பேசி முடிவு காண்பார்கள். இடையில் இப்படி வருகிற விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

ADVERTISEMENT

தேர்தல் நேரத்தில் இது போன்ற சலசலப்பு வரத்தான் செய்யும். எல்லா கூட்டணிக் கட்சிகளிலும் பேச்சுவார்த்தை நடக்கிற போது முரண்கள் எழும், சலசலப்பு உருவாகும். ஆனால், இறுதியில் சுமூகமான முறையில் தீர்வு காணப்படும். திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதுதான் இப்போது நிகழ்கிறது. இதனால் எந்தப் பாதிப்பும் கூட்டணிக்கு ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.

பலவீனமான கூட்டணியில் போட்டி பெரிய அளவில் இருக்காது; அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை இருக்காது. பலமுள்ள கூட்டணியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான போட்டி எழும். அதிகாரப் பகிர்வு தேவை என்கிற அந்த கருத்தும் எழும். இவ்வாறு சலசலப்பு எழுவதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம், திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது, ஆட்சிக்கு வரப்போகிறது. ஆகவேதான் போட்டி கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலும் கூட இந்தப் போட்டி, போட்டி சார்ந்த சில விமர்சனங்கள் எழுகின்றன.

ADVERTISEMENT

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக என்ன பகீரத முயற்சியை மேற்கொண்டாலும், என்ன சூது செய்தாலும், சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டங்களைத் தீட்டினாலும், அவர்களால் இங்கே வெல்ல முடியாது. அவர்கள் கணக்குத் தப்புக் கணக்காகத்தான் முடியும். தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட, வேறுபட்ட ஒரு மண். இந்திய மாநிலங்களில் இருந்து வேறுபட்ட ஒரு மண் என்பதை இந்தத் தேர்தலின் மூலமும் மீண்டும் அவர்கள் உணர்வார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share