காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைப்பது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜய் தம்முடன் ஆலோசனை நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று பிப்ரவரி 7-ந் தேதி செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: காங்கிரஸை சேர்த்துக்கலாமா? என்று விஜய், என்னிடம் கேட்டார். அதற்கு, காங்கிரஸைச் சேர்த்துக்கிட்டு என்ன அரசியல் பேசுறது?’ன்னு கேட்டேன்.
காங்கிரஸை கூட்டணியில் சேர்த்து கொண்டால், கச்சத்தீவுன்னு பேசுவீங்களா? காவிரி நதிநீர் உரிமையைப் பேசுவீங்களா? மீத்தேன், ஈத்தேன்னு நம்ம நிலவளத்தைச் சுரண்டுதுன்னு பேசுவீங்களா? கல்வி மாநில உரிமை, அதை எடுத்துட்டுப் போனது எப்படி?ன்னு பேசுவீங்களா? சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்தது யாரு? நீட் தேர்வை திணிச்சது யாரு?
மாநில உரிமைகளை கொண்டு போனது யாரு? ஒரு தேசிய இனம் தன் விடுதலைக்குப் போராடுச்சு, அந்த விடுதலையை அழிச்சு நாசமாக்கின ஆள் யாரு, கட்சி யாரு?ன்னு கேள்விகள் இருக்குது..
அப்ப அந்தக் கட்சியை கூட்டணியில சேர்த்துக்கிட்டு எந்த அரசியலைப் பேசுறது?
இந்தித் திணிப்பா? இந்தி எதிர்ப்பா? இந்தியைத் திணிச்ச மகான் யாரு? எல்லாம் அவங்கதான். இப்ப பாரதிய ஜனதா மதவாதம்… சரி பாபர் மசூதியை இடிச்சது யாரு? ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி- இடிக்க அனுமதிச்சது யாரு?
விடுதலை பெற்ற இந்தியாவை அரை நூற்றாண்டுகள் ஆண்ட கட்சி எது? ஆட்சி எது? இந்த நாடு மீள முடியாத ஏழ்மை, வறுமையிலயும், ஊழல் லஞ்சத்திலயும் ஊறித் திளைக்குதுன்னா அதுக்குக் காரணம் யாரு?
எங்களைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், இந்தியக் கட்சிகள், திராவிடக் கட்சிகளோட தேர்தல் உடன்பாடு இல்லை. இதுக்கு மாற்றாதான் நாங்க இந்த நிலத்துல இந்த அரசியலைக் கட்டி எழுப்புறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
