நெல்லையில் ஐடி ஊழியர் கவின் குமார் ஜாதி ஆணவப் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் – கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை ஐடி ஊழியர் கவின் குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை வந்த கவின்குமாரை தனியாக அழைத்து பேசிய அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் கவின் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் காவல் துறையினர் சுர்ஜித்தை கைது செய்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுர்ஜித்தின் தந்தை சரணவன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச்சரித்தேன்… ஆனால் கேட்கவில்லை!
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சுர்ஜித்தை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது அவர், “என் அக்காவும் கவின் குமாரும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் ஒன்றாக படித்தனர். தொடர்ச்சியாக இருவரும் பழகி வந்தனர்.
ஆனால் கவின் குமார் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது அக்காவுடன் பேசி பழகுவது எனக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் எனது அக்கா பாளை பகுதியில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
நான் பலமுறை எச்சரித்தும் கவின் தொடர்ந்து யாரையாவது ஒருவரை சிகிச்சைக்காக அங்கு அழைத்துச் சென்று என் அக்காவுடன் பேசி பழகி வந்தார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில் நேற்றும் அதே மருத்துவமனைக்கு அவர் செல்வது தெரிந்ததால், நான் அங்கு சென்று கவின் குமாரை தனியாக அழைத்து எச்சரித்தேன். ஆனால் அதை கேட்காமல், நான் பேசுவதை நிறுத்த மாட்டேன் என்று சொன்னதால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்தேன்” என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.