புரட்சி, நேர்மை, தியாகத்தின் வரலாற்று சாட்சியம் ‘தோழர் நல்லகண்ணு’

Published On:

| By Mathi

R Nallakannu Ayya

பொதுவாழ்வில் அரிதாகிப் போன நேர்மை, தூய்மை, தியாகத்தின் வரலாற்று சாட்சியமாக திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு அய்யா..

முதுபெரும் இடதுசாரித் தலைவரான தோழர் நல்லகண்ணு அய்யா இன்று பிப்ரவரி 25-ந் தேதி சென்னையில் 101 வயதில் காலமானார்.

ADVERTISEMENT

1925-ம் ஆண்டு 26-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி – கருப்பாயி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நல்லகண்ணு.

விவசாயப் பின்னணியில் இருந்து வந்த வைணவக் குடும்பம் அவருடையது. ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பைத் தொடர்ந்தார்.

ADVERTISEMENT

தனது 12வது வயதிலேயே, 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அரசியல் விதையை விதைத்துக் கொண்டார்.

1938ஆம் ஆண்டு நடந்த ஹார்வி மில் வேலைநிறுத்தத்தின்போது தொழிலாளர்களுக்கு அரிசி வசூலித்ததில் தொடங்கி, 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கு ஆதரவான நாடகத்தை மாணவர்களைத் திரட்டி எதிர்த்தது வரை, அவரது இளம் வயதிலேயே போராட்டக் குணம் மேலோங்கியது.

ADVERTISEMENT

1944ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நல்லகண்ணு, சென்னையில் ‘ஜனசக்தி’ இதழில் பணியாற்றினார். 1948இல் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, சிறைவாசம் அனுபவித்தார்.

சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார்.

1999ஆம் ஆண்டு தென் மாவட்டக் கலவரங்களின்போது, மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்ட பின்னரும், “உள்ளூர்க்காரர்கள் செய்திருக்க மாட்டார்கள்” என்று உறுதியாகக் கூறி, கலவரம் பெரிதாகாமல் தடுத்த அவரது மனிதநேயம் அனைவரும் வியந்தது. மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூகக் குழந்தைகளின் கல்வி உதவிக்கே வழங்கிய அவரது தியாகம் மகத்தானது.

தனது 80வது பிறந்தநாளின்போது கட்சி வசூலித்துக் கொடுத்த ஒரு கோடி ரூபாயைக் கட்சிக்கே திருப்பி அளித்தவர்.

2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை பெற்றார். ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் போர்வையில் நடக்கும் மணல் எடுப்பிற்கு எதிராகவும் போராடினார்.

1997-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதும் 2022-ல் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதும் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

‘Lincoln Book of Records’ இவரை “உலக அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவர்” என்று பாராட்டி உலக சாதனை விருதை வழங்கியது.

101 வயதைக் கடந்தும் மரண முகட்டில் இயற்கையுடன் கடந்த சில நாட்களாக போராடிக் கொண்டிருந்தார் அய்யா நல்லகண்ணு. இன்று இயற்கை தோழர் நல்லகண்ணு அய்யாவை அரவணைத்துக் கொண்டது.. நம்மை விட்டு பிரிந்துவிட்டார் நல்லகண்ணு அய்யா.

”தோழர் நல்லகண்ணு“ ” நம்மை விட்டு பிரிந்தாலும் நல்லகண்ணுவின் வாழ்க்கை இந்த தமிழ்நாட்டு மண்ணில் புரட்சிகர வாழ்வுக்கும் நேர்மைக்கும், தியாகத்திற்கும், மக்கள் சேவைக்கும் வரலாற்று சாட்சியமாக என்றைக்கும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share