மருமகள் அளித்த புகார்… உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து!

Published On:

| By Kavi

மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் விதித்த அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மும்பையில் தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தவர் அமுதா. 2020 ஆம் ஆண்டு நெல்லை பத்தமடையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தார்.

ADVERTISEMENT

அப்போது சொத்து பிரச்சனை தொடர்பாக அமுதாவுக்கும் மாமியார் சுப்புலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் மருமகள் அமுதா தன்னை தாக்கியதாக மாமியார் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் அமுதா காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜரத்தினம், அமுதாவை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அமுதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார் . இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, அமுதாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை ராஜரத்தினத்திடமிருந்து வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து ராஜரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 23) நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜரத்தினம் சார்பில் வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் ஆஜராகி, “மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி, முறையான விசாரணை நடத்தாமல் மனித உரிமைகள் ஆணையம் உதவி ஆய்வாளர் ராஜத்தினம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. அமுதா பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர், காயமடைந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை” என்று வாதம் முன்வைத்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “மனித உரிமை ஆணையம் சட்டப்படி விசாரணை நடத்தாமல், புகார் மற்றும் பதில் மனுக்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புகார்தாரரான அமுதா காயமடைந்தது தொடர்பான மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. யூகத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறி உதவி ஆய்வாளர் ராஜரத்தினத்துக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share