தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சிளை பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழக பாஜக துணைத் தலைவர்கள் 15 பேரில் ஒருவராக நடிகை குஷ்பு பெயரும் இடம் பெற்றிருந்தது. இதில் நடிகை குஷ்பு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி, பாஜகவின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் முன்னிலையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மொத்தம் 180 நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களில் 40 பேர் பெண்கள். இந்த நிகழ்ச்சிகளில், பாஜக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பாஜக அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் கடந்த 3 நாட்களாக புதுச்சேரி, தமிழகத்தில் முகாமிட்டுள்ளார். புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை நேற்று சந்தித்துவிட்டு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிஎல் சந்தோஷ். அப்போது, புதியதாக அமைச்சராக்கப்பட்ட ஜான் குமாருக்கு இன்னமும் துறை ஒதுக்கப்படாதது குறித்து பிஎல் சந்தோஷிடம் ஆதங்கத்தை கொட்டினர் புதுவை பாஜக நிர்வாகிகள்.
இதன் பின்னர் தமிழகம் வந்த பிஎல் சந்தோஷ், சென்னையில் உள்ள கட்சி தலைமையகமான கமலாலயத்தின் மாடியில் தங்கினார். இன்று காலை 14 பேர் கொண்ட பாஜகவின் மையக் குழு கூட்டத்தை கூட்டினார் பிஎல் சந்தோஷ்.
இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்னார், தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி எப்படி இருக்கிறது? அதிமுகவுடனான கூட்டணியில் வேறு சில கட்சிகள் இணையுமா? கூட்டணியை வலுப்படுத்த ஆலோசனைகள் இருக்கிறதா? என ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு பதிலைப் பெற்றாராம் பிஎல் சந்தோஷ்.
அப்போது, தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற OPS உதவியாக இருந்திருப்பார். அவரை கூட்டணிக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்து பிஎல் சந்தோஷிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பூத்துகளில் எப்படி சிறப்பாக செயல்படுவது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கடந்த முறை 100 வாக்குகள் பெற்ற பூத்துகளில் இம்முறை கூடுதலாக 38 வாக்குகளை வாங்கியாக வேண்டும் என சொல்லப்பட்டதாம்.
திமுக எப்படி மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதோ அதேபோல மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் வீடு வீடாக கொண்டு போய் சேர்க்க மொபைல் வேன் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாம்.
அத்துடன், அரசியல் கட்சிகள் பொதுவாக பூத் முகவர்கள் என்று மட்டும்தான் நியமிப்பர்; ஆனால் பாஜகவில் ‘ஒரு பேப்பரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எத்தனை பேர் இடம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பொறுப்பாளர்- அதாவது ‘ஒரு பக்கத்துக்கு ஒரு பொறுப்பாளர்’ என நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர்தான் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் பயிற்சி பட்டறை கூட்டம், பிஎல் சந்தோஷ் முன்னிலையில் நடைபெற்றது; இந்த நிகழ்ச்சியைத்தான் குஷ்பு புறக்கணித்தார். தமக்கு பத்தோடு பதினைந்தாக உள்ள மாநில துணைத் தலைவர் பதவி கொடுத்ததை ஏற்க முடியாத நிலையில்தான் இன்றைய கூட்டத்தை குஷ்பு புறக்கணித்திருக்கின்றனர் என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.