கோவை விமான நிலையத்தில் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் அருகே காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி கோவையில் தங்கி படித்து வருகிறார். கோவையில் நேற்று இரவு 11 மணி அளவில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் வினீத் என்பவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் வினீத்தை அரிவாளால் தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர்.
இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த வினித் மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து கண் விழித்த வினீத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் நிர்வாண நிலையில் கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மாணவியின் ஆண் நண்பர் வினித் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை கோவை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.
