20 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நேற்றுவரை 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 20 குழந்தைகளுக்கு திடீரென சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த உயிரிழப்புக்கான விசாரணையில், குழந்தைகளுக்கு ‘கோல்ட்ரிப்’ (Coldrif) இருமல் மருந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இறந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில், மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘டை எத்திலீன் கிளைகால்’ (Diethylene Glycol) என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பெயிண்ட் மற்றும் மை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இந்த ரசாயனம், ‘கோல்ட்ரிப்’ மருந்தில் 48.6 சதவீதம் கலந்திருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
20 குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு காரணமான இந்த சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ்’ (Sresan Pharmaceuticals) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கெனவே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அந்த மருந்துகளை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பார்சியா காவல் நிலையத்தில், ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘கோல்ட்ரிப்’ மருந்தை குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகம் வந்த மத்திய பிரதேச போலீசார், கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்துள்ளனர். சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.