தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு : 3 பேர் குற்றவாளிகள்… 4 மாதத்தில் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By Kavi

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என்று மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2025, நவம்பர் 2-ம் தேதி இரவு, கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில், காரில் தனது ஆண் நண்பருடன் 21வயதான மாணவி பேசிக்கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார் கதவை திறக்குமாறு கூறியுள்ளது. ஆனால் இருவரும் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல்  கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்துள்ளது. தொடர்ந்து மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியதால் அவர் மயங்கியுள்ளார். 

இதையடுத்து அந்த மாணவியை மறைவிடத்துக்கு தூக்கிச் சென்ற அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே மயக்கம் தெளிந்த மாணவியின் ஆண் நண்பர் அவரைத் தேடியுள்ளார். 

ADVERTISEMENT

தொடர்ந்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியை தேடினர். 

இதில் அந்த மாணவி அங்கிருந்த சுவருக்கு பின்னால் சுயநினைவின்றி இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் குற்றம் செய்தவர்களை தீவிரமாக தேடினர். 

ADVERTISEMENT

சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை கைது செய்தனர். 

இவர்களை அழைத்துச் செல்லும் போது துடியலூர் அருகே தப்ப முயன்றதால் போலீசார் சுட்டு பிடித்தனர். 

இதுதொடர்பான வழக்கு கோவை மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.  பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பர் மற்றும் தாயார் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர்.  மரபணு பரிசோதனை முடிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 2, 2026 அன்று தொடங்கிய விசாரணை, வெறும் 22 நாட்களில் நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச் 7) குற்றம்சாட்டப்பட்ட  மூன்று பேரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி சுந்தர்ராஜன் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 

அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி கருப்பசாமி , காளீஸ்வரன் , குணா  ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.  இவர்கள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கில் மிக விரைவாக கிடைத்திருக்கக் கூடிய இந்த தீர்ப்பு  பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கிடைத்த மிகப்பெரிய நீதியாக பார்க்கப்படுகிறது. 

அதோடு தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்த முக்கிய தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share