கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்காவை வரும் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. கல்வி, தொழில், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றம் மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோவை நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் திட்டத்தை கலைஞர் உருவாக்கினார். பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி வந்த பின் செம்மொழிப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக கோவையில் செம்மொழிப் பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 45 ஏக்கர் பரப்பில் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு 167.25 கோடி நிதி மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்காவில் 100 வகையான வண்ண வண்ண ரோஜாக்களுக்கு வரிசையாக 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செம்மொழிவனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் என 23 விதவிதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரிய வகை பூச்செடிகளும் அமைக்கப்பட உள்ளது. ராஜமுந்திரியில் இருந்து மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் 1000 பேர் அமரலாம். மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி, உணவு அருந்தும் கூடம், கூட்ட அரங்கம், விருந்தினர் அறை, பூங்கா வளாகத்தில் நடை பயிற்சி பாதை, சிறுவர்களுக்கான பொழுது போக்கு ஏற்பாடுகள், புல்தரை, இருக்கை வசதி என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 14) 18ஆவது கோவை விழா தொடக்க நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “அனைத்து துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால் அது கோவை தான். சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை. வருகின்ற 26ம் தேதி முதல்வர், கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார். அது கோவைக்கு பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும்” என்றார்.
