தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் வேலைகளுக்கு தயாராகி வருகின்றன.
குறிப்பாக கோவை வடக்கு தொகுதியில் இந்த முறை யார் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக-பாஜக கூட்டணியில், கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெற்கு தொகுதி வேண்டும் என பிடிவாதமாக கேட்டபோது, ஏற்கனவே அங்கு வெற்றி பெற்றிருந்த அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் அதை விட்டுக்கொடுக்க மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது.
அதேசமயம், அம்மன் அர்ஜுனனை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வைத்தது. அந்தத் தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர். இப்போது 2026 தேர்தலில், அம்மன் அர்ஜுனன் தனது பழைய தொகுதியான கோவை தெற்கில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வேலுமணி, பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசனிடம் பேசி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியதாகவும், அங்கு வெற்றி பெற வைப்பது தனது பொறுப்பு என்று வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாகத்தான் பொங்கல் விழாவை ஒட்டி கோவைக்கு வந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கூட கோவை வடக்கில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதற்கிடையில் திடீர் திருப்பமாக, எஸ்.பி. வேலுமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவிலிருந்து விலகியிருந்த வடவள்ளி சந்திரசேகர், கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
எஸ்.பி. வேலுமணியின் முன்னிலையில் வடவள்ளி சந்திரசேகர் இணைந்தது அதிமுகவுக்கு பலம் சேர்ப்பதாக பார்க்கப்படுகிறது. கோவை வடக்கு தொகுதியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் மீண்டும் இணைந்திருப்பது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதேசமயம், சந்திரசேகர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை வைத்துள்ளதுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், ஏற்கனவே வானதி சீனிவாசனை கோவை வடக்கில் நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை மீண்டும் கோவை தெற்கில் போட்டியிடச் செய்யலாம் என்று எஸ்.பி.வேலுமணி முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம், கோவை வடக்கில் சந்திரசேகரை நிறுத்தலாமா? அல்லது அம்மன் அர்ஜுனனை நிறுத்தலாமா? என்ற குழப்பத்திற்கு தீர்வு காண எஸ்.பி. வேலுமணி முயற்சித்து வருகிறார்.
ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த அம்மன் அர்ஜுனனை போட்டியிலிருந்து விலகச் செய்து, கட்சி வேலைகளைப் பார்க்க வைக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி தனது தீவிர ஆதரவாளர்களான, அம்மன் அர்ஜூனன், சந்திரசேகர் இருவரில் யாருக்கு சீட் ஒதுக்குவார்? கோவை வடக்கு தொகுதியில் இறுதியாக யார் களம் காணப் போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
