கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனக் கூறி வீடியோ ஒன்று வெளியானது. அதில் 85 வயதான நோயாளி ஒருவரை அவரது மகன் இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. மேலும் வீல்சேரில் வைத்து அழைத்து செல்ல ரூ.100 லஞ்சம் கேட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது.
பின்னர், பணியின் பொழுது அலட்சியமாக செயல்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் இருவரை 5 நாட்கள் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.
இது குறித்து நேற்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் சக்கர நாற்காலி வழங்காமல், 100 ரூபாய் லஞ்சம் கேட்டனர்” என்ற குற்றச்சாட்டுடன் செய்தி வெளியானது இது குறித்த விசாரணையில் 9.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் வடிவேல் (85) தமது உறவினருடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்தார். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியதும், வாக்கர் உதவியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தார். JICA (ஜே.ஐ.சி.ஏ.) கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவில் (Vascular Surgery) பரிசோதிக்கப்பட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட காலில் இரத்த ஓட்டம் திருப்திகரமாக இருந்ததால், அவரை பொது அறுவை சிகிச்சை பிரிவிற்கு (General Surgery) அனுப்பினர். அப்போது நோயாளியின் உறவினர், கீழ்தளத்தில் சக்கர நாற்காலி கேட்டார், ஆனால், அதற்கான பணியாளர் அன்றைய நேரத்தில் மற்றொரு நோயாளியை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றிருந்ததால், சுமார் 15 நிமிட தாமதம் ஏற்பட்டது. பின்னர் சக்கர நாற்காலி வழங்கப்பட்டபோதிலும், நோயாளியின் உறவினர் அதை ஏற்க மறுத்து, அங்கு இருந்த பணியாளருடன் வாக்குவாதம் செய்தார்.
இந்த நேரத்தில், நோயாளியின் உறவினர் வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து வந்தார் . சிசிடிவி காட்சிகளில் தெளிவாக காணப்படுவதுபோல, நோயாளியின் கையில் இருந்த வாக்கரை பலவந்தமாக அகற்றி, அதை ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்து விட்டு தனது மொபைல் போனை ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்து வீடியோ எடுத்து , நோயாளியின் நிலையை பெரிதுபடுத்த முயன்றார். நோயாளி நடந்து செல்ல சிரமப்பட்டபோதும், உறவினர் அவரை பலவந்தமாக இழுத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
பின்னர் மருத்துவமனை நுழைவாயிலில், “சக்கர நாற்காலி வழங்கவில்லை” என்ற பெயரில் செயற்கையாக குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்ட போது அரசு மருத்துவமனை மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் மருத்துவமனையை குற்றம் சாட்டும் நோக்கில் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. மருத்துவமனையில் போதிய அளவில் சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. இருப்பினும் நோயாளிக்கு சேவை வழங்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தை கருத்தில் கொண்டு 2பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் நோயாளி வாக்கர் உதவியுடன் நடந்து வருகிறார். அதை அகற்றி விட்டு பலவந்தமாக அவரை இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.