கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு வீல் சேர் தராத ஒப்பந்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர் வடிவேல்(82). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது. இது ஆறாமல் நாளடைவில் ஆழமானதால், கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலை அவரது மகன் நேற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது தந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு வீல் சேர் கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் வீல் சேர் கொடுக்காமல் பணம் கேட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து காளிதாஸ் கூறுகையில், “எனது தந்தைக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. சர்க்கரை நோயால் கால் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவரை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திற்கு பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது வீல் சேர் தராமல் அலைக்கழித்தனர். 2 மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. 100 ரூபாய் கொடுத்தால் வீல் சேர் தருகிறேன் என்று ஒரு ஊழியர் கூறினார்.
பணம் கொடுக்கிறோம் என்று சொன்ன பிறகும் தரவில்லை. வரிசையில் காத்திருப்பவர்களை முடித்துவிட்டு தருவதாக கூறினார்கள். வெறுப்பில் இங்கு சிகிச்சையே வேண்டாம் என்று திரும்பி வந்து விட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
காளிதாஸ் தனது தந்தையை தூக்க முடியாமல் ஆட்டோ ஏற மருத்துவமனை உள்ளே இருந்து இழுத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி கண்டனத்தை குவித்தது.
இந்தநிலையில் முதியவர் இழுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக, மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஒப்பந்த நிறுவன சூப்பர்வைசர்கள் எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் ஆகிய இருவரை 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் அவர், மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பொதுவாக வடமாநிலங்களில் பெட் இல்லாமல் நோயாளிகளை கீழே படுக்கவைப்பது, ஆம்புலன்ஸ் தராமல் இறந்தவர்களை பைக்கில் தூக்கி சென்றது என பல சம்பங்கள் நடந்துள்ளன.
இந்தசூழலில் தமிழகத்திலும் இதேபோன்ற அவலநிலை ஏற்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.