கோவை மாநகர திமுக மாவட்ட செயலாளராக இருந்த நா.கார்த்திக் அப்பதவியில் இருந்து இன்று (செப்டம்பர் 25) நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செந்தமிழ்ச்செல்வன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், கோவை மாநகர திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் கட்சி பொதுச்செயலாளார் துரைமுருகன்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் கோவை நா.கார்த்திக் அவர்களுக்குப் பதிலாக துரை செந்தமிழ்ச்செல்வன் கோவை மாநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நா.கார்த்திக், திமுக தீர்மானக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கோவையில் தற்போது கட்சியில் இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு துரை செந்தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செந்தமிழ்ச்செல்வன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
+