வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Cylinder

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கடும் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60% இறக்குமதி செய்கிறது. இதில் 90% ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகிறது. போர் காரணமாக இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதால் இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் நிலவும் இந்தப் போரினால் இந்தியா குறிப்பாக எரிசக்தித் துறையில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT

மத்திய அரசு வீடுகளுக்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவு சார்ந்த தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே 50 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கோவையிலும் இந்த பாதிப்பு கடுமையாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

நூதனப் போராட்டம்

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வர்த்தகர் கிளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வணிக சிலிண்டர் ஒன்றுக்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கு நடத்துவது போன்ற நூதனப் போராட்டத்தை மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஎம் பொருளாளர் பத்மநாபன், “மத்திய அமைச்சர்கள் தட்டுப்பாடு இல்லை என பொய் கூறுகின்றனர். அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து ரஷ்யாவிடமிருந்து கிடைத்த உதவிகளை நிராகரித்ததே இந்த நிலைக்குக் காரணம். அத்தியாவசிய எரிவாயு இருப்பை பராமரிக்கத் தவறியதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நாடு முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் “உடனடி தட்டுப்பாடு இல்லை” எனக் கூறினாலும், உற்பத்தியை அதிகரிக்கவும், மாற்று வழிகளை ஆராயவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொழில்துறை பிரதிநிதிகள் சிக்கல் தொடர்ந்தால் பல உணவகங்கள் மூடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share