பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நவம்பர் 19-ந் தேதி கறுப்பு கொடி காட்டப்படும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அறிவித்துள்ளன.
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நவம்பர் 19-ந் தேதி கோவை வருகிறார். கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
மோடியின் வருகையையொட்டி கோவை நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கோவையில் கறுப்பு கொடி காட்டுவோம் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அறிவித்துள்ளன. கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் தலைமையில் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நவம்பர் 14-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக, விசிக, திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடத் தமிழர் கட்சி உள்ளிட்டவைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக பிரதமர் மோடிக்கு கோவையில் வரும் 19-ந் தேதி கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவை விமான நிலையம் முன்பாக மோடிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
