கோவை மக்களின் நீண்ட கால கனவாக உள்ள அவினாசி மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயுடுவின் பெயரை சூட்டப்படுவதாக என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், அவினாசி சாலையில் போக்கு வரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அவினாசி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த அவினாசி பாலமானது 17.25 மீட்டர் அகலம் கொண்டது. சுமார் 305 பில்லர்களுடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் கல்லூரி, நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம், ரெசிடென்சி ஓட்டல் ஆகிய இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும் கொரோனா பெருந்தொற்று கால சூழ்நிலையாலும் , நான்காண்டுகளில் முடிய வேண்டிய பணிகள் தொடர்ந்து கால தாமதம் ஆன நிலையில் தற்போது ரூபாய் 1791 கோடி மதிப்பிட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் திறந்து வைக்க உள்ளார்
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், 2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #avinashiRoadFlyover-ஐ, நமது DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த ‘அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால’த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் #GDNaidu பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.