தேங்காய் எண்ணெய் விலை சில்லறை விற்பனையில் லிட்டர் 410 முதல் 450 ரூபாய் வரையும், செக்கு எண்ணெய் லிட்டர் 560 ரூபாய் வரையும் சந்தையில் விற்கப்படுகிறது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல இந்திய உணவுகளில் தேங்காய் பயன்பாடு அதிகம் உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துகின்றனர். இது தவிர ஹேர் ஆயில் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களுக்கு தேங்காய் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 5.7 லட்சம் டன் (லிட்டர்) தேங்காய் எண்ணெய்யில் சுமார் 3.9 லட்சம் டன் வரை உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள எண்ணெய் அழகுசாதன பொருட்கள், சோப்புகள், ஹேர் ஆயில் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது தேங்காய் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்யின் விலை உயர்வு மற்ற பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விலை உயர்வுக்கான காரணங்கள்!
உலக அளவில் தேங்காயின் தேவை அதிகரிப்பு காரணமாகக் கொப்பரை விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றன. மேலும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற கொப்பரை தேங்காய் சாகுபடி செய்யும் நாடுகளில் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் வணிக சந்தையில் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் கோவை திருப்பூர் போன்ற பகுதிகளில் வெள்ளை ஈ, மற்றும் கேரளா வேர் வாடல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது விளைச்சலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தேங்காய் சீசனில் சுமார் 40 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவும் கொப்பரை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
கலப்பட ஆபத்து!
தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எண்ணெய்யில் கலப்படம் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுகுறித்து உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்நிலையில் கேரளாவில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தேங்காய் எண்ணெய் தேவை அதிகரிக்கும். இதனால் விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் கருதுகின்றனர். மேலும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக கேரளாவின் சிப்ஸ் உள்ளிட்ட பல ஸ்நாக்ஸ் வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரிகள் தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் சீசனில் தேங்காய் விளைச்சல் அதிகரித்தால் தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.