தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜூலை 27-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். முதல்வர் ஸ்டாலின் முழுமையாக குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் ஜூலை 21-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு முழுமையான உடற்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஜூலை 24-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது; முதல்வர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி பற்றி ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஜூலை 27-ந் தேதி மாலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பும் போது மருத்துவமனை பகுதியில் நீண்ட வரிசைகளில் காத்திருந்த திமுக தொண்டர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்கள் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு, அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நலமாக உள்ளார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.