மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சீர்செய்ய வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 9) அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக அளவில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு, பொதுமக்களும் உணவக உரிமையாளர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழல் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தற்போதைய எரிவாயு இருப்பு, விநியோகச் சீரமைப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்குக் கடிதம்
ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் தனது ‘எக்ஸ்’ பதிவில், “அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். போரினால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அங்கு சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நலனை உறுதி செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையினர் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்கவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
