பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
சென்னை கிழக்கு அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை வடக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், சென்னை மேற்கு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, சென்னை தெற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோ பல்வேறு பகுதிகளில் பங்கேற்று உரையாற்றினர்.
இதேபோல் கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரத்தினபுரி பகுதிக்கழகம் பகுதியில், பகுதி கழக செயலாளர் கோவை லோகு முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் பங்கேற்று, ஒன்றிய அரசிற்கு கண்டனங்களை தெரிவித்தார். கேஸ் சிலிண்டருக்கு மாலைபோட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் தாமஸ், மதிமுக செல்வராஜ், சிபிஎம் முருகேசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
