ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதலுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நேற்று (மார்ச் 11) அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொண்டார். அவர் விழாவை விட்டு வெளியே வந்தபோது, 63 வயது மதிக்கத்தக்க கமல் சிங் ஜம்வால் என்ற நபர், பரூக் அப்துல்லாவை நோக்கித் துப்பாக்கியால் சுட முயன்றார். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்ததால், பரூக் அப்துல்லா எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுட முயன்ற நபர் “கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தருணத்திற்காக நான் காத்திருந்தேன். இந்தச் செயலுக்காக நான் எவ்வித வருத்தமும் அடையவில்லை” என அதிர்ச்சி தரும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் கண்டனம்:
இச்சம்பவம் குறித்து இன்று (மார்ச் 12) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ” “ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களின் உயிரைப் பறிக்க நடந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை. டாக்டர் அப்துல்லா அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதியடைந்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சருமான உமர் அப்துல்லா ஆகியோருடன் தாம் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
