டிஜிட்டல் திண்ணை: வாங்கி கட்டிய வாசன் – இபிஎஸிடம் சவால் விட்ட அன்புமணி- செந்தில் பாலாஜிக்கு சிஎம் ‘சீரியஸ்’ உத்தரவு!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், ‘அடாது பெய்யும் மழையிலும் விடாத முயற்சிகள்’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா விடா முயற்சிகள் ? சூடான தகவல்களை சொல்லுமய்யா..

ADVERTISEMENT

சொல்றேன்.. பிரதமர் மோடி நவம்பர் 19-ல் கோவைக்கு வர்றாரு இல்லையா.. மோடிக்கு சிறப்பான வரவேற்பு தரனும்னு பாஜக ஒரு குழுவையே போட்டிருக்கு.. அதிமுக தரப்புல, மோடியை சும்மா சந்திக்க கூடாதுன்னு கோரிக்கை மனுவுடன் எடப்பாடி ரெடியாகிட்டு இருக்காரு.. ஜிகே வாசனும் மோடியை சந்திக்க போறாரு..

இன்னொரு பக்கம், பீகார் தேர்தல் பிரசாரத்துல, தமிழர்களை இழிவாக பேசுனதுக்காக மோடிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்துக்கும் கட்சிகளும் இயக்கங்களும் ‘ஸ்கெட்ச்’ போடுவதால கோவை டென்ஷனில் இருக்கு..

ADVERTISEMENT

சரி.. மோடிகிட்ட எடப்பாடி என்ன மனு தரப் போறாராம்?

எல்லாமே தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள்தானாம்.. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்தனும்; தமிழக மீனவர்களை இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யனும்.. இந்த மாதிரி கோரிக்கைகள்தான் மோடிகிட்ட எடப்பாடி தரப் போகும் மனுவில் இருக்கிறதாம்

ADVERTISEMENT

ஓஹோ.. எடப்பாடியை ஜிகே வாசன் சந்திச்சாரே..

ஆமாய்யா.. பாஜக கூட்டணியில இருக்கிறதால எடப்பாடியை சந்திச்சு பேசுனாரு ஜிகே வாசன். ரொம்ப நேரமாக சீரியசாக ரெண்டு பேரும் பேசினாங்க..

அப்படி என்னப்பா சீரியசான டிஸ்கஷன்?

இந்த சந்திப்பு பத்தி எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “அதிமுக ஒற்றுமையாக இருந்தா நல்லா இருக்கும்னு ஜிகே வாசன்தான் ஆரம்பிச்சாரு.. பொதுச்செயலாளரும் (இபிஎஸ்) இதை எதிர்பார்த்த மாதிரி அடுக்கடுக்கான விளக்கம் கொடுத்தார்..

முதல்ல ஓபிஎஸ் செஞ்ச வேலைகளை பற்றி எடப்பாடி ஒவ்வொன்னாக சொன்னார்.. ‘போன தேர்தலில் துணை முதல்வர், கட்சியோட ஒருங்கிணைப்பாளர்னு ஓபிஎஸ் நம்ம கூட இருந்தாரு.. ஆனாலும் தென் மாவட்டங்களில் ரொம்பவே மோசமாக தோத்துதான் போனோம்..

வேட்பாளர்களுக்கு எல்லாம் கடைசி வரை ஓபிஎஸ் பணமே கொடுக்காம ஏமாத்துனார்; இதுபற்றி கேட்டா, பணத்தை என் கிட்ட கொடுத்தாச்சுன்னு சொல்லிட்டாரு.. அப்படி எல்லாம் பணமே வரல.. அவரைப் பொறுத்தவரைக்கும் அதிமுக தோக்கனும்.. திமுக ஜெயிக்கனும்னு நினைச்சாரு.. அதைத்தான் செஞ்சு காண்பிச்சாரு..

இப்ப திரும்பவும் அவரை உள்ளே சேர்த்தாலும், அதே மாதிரி எனக்கு அத்தனை சீட்.. இத்தனை சீட் வேணும்பாரு.. ஜெயிச்ச பிறகு அமைச்சர்கள் பதவி, துணை முதலமைச்சர் பதவின்னு கேட்டு குடைச்சல்தான் கொடுப்பாரு..

ஓபிஎஸ் நம்ம கூட இருக்கிறதால பிளஸ்ஸைவிட மைனஸ்தான் ரொம்ப அதிகம்.. இதைத்தான் டெல்லியிலும் சொல்லி இருக்கிறேன்..” என்றாராம்.

அப்ப குறுக்கிட்ட ஜிகே வாசன், “என்னதான் இருந்தாலும் மெகா கூட்டணி அமைஞ்சா நல்லதுதானே… டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலான்னு எல்லோரையும் சேர்த்துகிட்டா பலம்தானே” என திரும்பவும் சொல்ல இபிஎஸ் ரொம்பவே அப்செட் ஆகிட்டாராம்.

ஜிகே வாசனிடம் சற்று காட்டமாகவே, “நீங்க தினகரன் கொடுக்கிற பேட்டி எல்லாம் பார்க்கிறீங்களா இல்லையா? தினமும் அவரு என்ன சொல்றாரு.. என்னை முதல்வர் வேட்பாளராகவே ஏத்துக்கவே முடியாதுன்னு சொல்றாரு.. அவரு எல்லாம் நம்ம கூட்டணியில?

தினகரனுக்குமே அதிமுக ஜெயிக்க கூடாது; நான் தோற்கனும்; ஓபிஎஸ் மாதிரியே திமுகதான் ஜெயிக்கனும்னு நினைக்கிறவரு…. அதனால டிடிவி எல்லாம் சரிபட்டு வரமாட்டாரு..

ஆனால், சசிகலாவைப் பொறுத்தவரைக்கும் கடைசிநேரத்துல அதிமுக ஆட்சி அமையனும்; அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னுதான் அறிக்கை கொடுப்பாரு..”ன்னு சொல்லி இருக்கிறாராம்.

ஓஹோ.. விஜய் பற்றி பேசுனாங்களா?

ஆமாய்யா.. “இப்ப திமுக ஆட்சி மேல ரொம்ப அதிருப்தியாக இருக்காங்க.. அதனால நாமதான் ஜெயிப்போம்.. விஜய்-க்கு எல்லாம் பெருசா ஓட்டு கிடைக்காது.. அவரு வேணும்னா திமுகவுக்கும் தனக்கும் போட்டின்னு சொல்லிகிட்டே இருக்கலாம்.. கடைசிநேரத்துல பாருங்க.. திமுக- அதிமுக இடையேதான் போட்டின்னு வந்து நிற்கும்” என வாசனிடம் ரொம்பவே நம்பிக்கையாக இபிஎஸ் சொல்லி இருக்கிறார்..

ரொம்ப டீட்டெயிலாகத்தான் பேசியிருக்காங்க போல..

அதே மாதிரி, இபிஎஸ்ஸை அன்புமணி பாமக எம்.எல்.ஏ. சதாசிவமும் சந்திச்சு பேசுனாரு.. அப்போ அன்புமணி, இபிஎஸ்கிட்ட போனில் பேசியிருக்காரு..

ஓ.. இபிஎஸ்கிட்ட அன்புமணி என்ன சொன்னாராம்?

பாஜக கூட்டணியில அன்புமணிகிட்ட பாஜகவும் ராமதாஸ்கிட்ட இபிஎஸ்ஸும் பேசுறதா நாம சொல்லி இருந்தோம் இல்லையா? அப்படி ராமதாஸ்கிட்ட இபிஎஸ் பேசுவதை தடுக்கத்தான் இந்த ‘தூது விடும்’ படலமாம்..

இபிஎஸ்கிட்ட போனில் பேசும் போது, “எங்க அய்யாகிட்ட பாமக கட்சியே இல்லை.. எல்லா ஓட்டும் என்கிட்டதான் இருக்கு.. எங்க கட்சியில 95% ஓட்டு என்கிட்டதான் இருக்கு.. அய்யாவை கூட்டணியிலேயே சேர்க்காதீங்க.. அவரு இல்லாம நாம தேர்தலை சந்திக்கலாம்..

ஜிகே மணி, அருள்னு ரெண்டு மூனு பேரை வெச்சுகிட்டு அய்யா ஏதோ செஞ்சுகிட்டு இருக்காரு.. சேலத்துல மாநாடு நடத்தப் போறதா அறிவிச்சிருக்காரு.. அதுக்கு நீங்க அதிமுக சைடுல ஒத்துழைப்பு எல்லாம் தர வேண்டியது இல்லை..

அடுத்த மாசம் 17-ந் தேதி வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போறோம்.. எங்களுக்கு முன்னாடி அய்யாவும் டிசம்பர் 12-ந் தேதி போராட்டம் நடத்துவோம்னு அறிவிச்சிருக்காரு..

டிசம்பர் 17-ந் தேதி அன்னைக்கு எத்தனை ஆயிரம் பேர் அரெஸ்ட் ஆகி ஜெயிலுக்கு போறாங்கன்னு பாரு.. அப்பதான் நான் சொல்றதுன்னு உண்மை உங்களுக்கும் தெரிய வரும்.. அதுக்கு அப்புறமாக நீங்களே ஒரு முடிவு எடுப்பீங்க”ன்னு சவால் விடுற மாதிரியே அன்புமணி பேசுனார் என
எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் ஷேர் செய்தனர்.

அத்துடன், அன்புமணி சொன்ன விஷயத்தை ஒன்னுவிடாம அப்படியே ராமதாஸுக்கும் இபிஎஸ் பாஸ் செஞ்சுட்டாராம்..

ஓஹோ.. டாக்டர் ராமதாஸ் ரியாக்‌ஷன் என்னவாம்?

அது வேற லெவலில் போய்கிட்டு இருக்குய்யா.. அங்கிட்டு இபிஎஸ்ஸை ராமதாஸ் புகழ்ந்து தள்ளுவதும் இங்கிட்டு ராமதாஸை நம்பகமான தலைவர்னு இபிஎஸ் புகழ்வதுமாக போய்கிட்டே இருக்கு..

அன்புமணி போனில் பேசுனது பற்றி அதிமுக சீனியர்களிடம் பேசும் போது, ‘லோக்சபா தேர்தலில் ராமதாஸ் நம்ம கூட கூட்டணி வெக்கனும்னு முடிவு செஞ்சிருந்தாரு.. அன்புமணிதான் பாஜக பக்கம் இழுத்துட்டுப் போயிட்டாரு.. அன்புமணிக்கு நம்ம கூட்டணி ஜெயிக்க கூடாது.. அப்படி ஜெயிச்சா, என்னாலதான் கூட்டணி ஜெயிச்சிடுச்சு சொல்லிடுவேன்னு நினைச்சாராம்.. தருமபுரியில கூட நாம இல்லாம ஜெயிச்சுடலாம்னு நினைச்சாரே.. ஒன்னும் நடக்கலையே. அன்புமணியை விட டாக்டர்தான் நமக்கு நம்பகமான லீடர்”-னு இபிஸ் சொல்லி இருக்காரு..

அன்புமணி சவாலில் ஜெயிக்கிறாருன்னு பார்ப்போம்.. டெல்லிக்கு காங்கிரஸ் ‘தலை’கள் படையெடுத்திருக்காங்களே?

ஆமாய்யா.. பீகார் தேர்தலில காங்கிரஸ் ரொம்ப மோசமான தோல்வி அடைஞ்சதால ராகுல் காந்தி ரொம்ப அப்செட்டில இருக்கிறாருன்னு சொல்லி இருந்தோம்.. அதுக்காக அப்படியே இருக்க முடியாதே.. இப்ப SIR நடக்குற 12 மாநில காங்கிரஸ் தலைவர்கள், செயலாளர்கள், மூத்த தலைவர்கள்னு எல்லோரையும் டெல்லிக்கு வரவழைச்சு ஆலோசனை நடத்தி இருக்காங்க..

தமிழகத்துல இருந்தும் செல்வப்பெருந்தகை, சீனியர் லீடரான பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவங்களோட கார்கே, ராகுல் சீரியசாக பேசினாங்க..

இந்த ஆலோசனை பற்றி ராகுலுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசிய போது, “முதல்ல SIR பற்றி டிஸ்கஷன் நடந்துச்சு.. அப்புறமா எலக்‌ஷன் வர்றதால தமிழக தேர்தல் நிலவரம் பற்றி யும் பேசுனாங்க.. சீனியர் தலைவரான பீட்டர் அல்போன்ஸ், புள்ளி விவரங்களை கையில் வெச்சுகிட்டுதான் பேசுனாரு.. “தமிழ்நாட்டுல இப்ப இருக்கிற திமுக கூட்டணிதான் தொடரும்; திமுக கூட்டணிதான் எலக்‌ஷன்ல ஜெயிக்கும்.. இந்த எலக்‌ஷனுக்கு சீட்டுகளை திமுககிட்ட கொஞ்ச அதிகமாக கேட்டு பார்க்கலாம்” என சொல்லிட்டு திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம்னு சொல்றதுக்கான கால்குலேஷன்களையும் எடுத்து வெச்சாரு பீட்டர் அல்போன்ஸ்..

செல்வப் பெருந்தகை பேசும் போது, “2019-ல் திமுக நமக்கு 9 சீட் கொடுத்துச்சு.. அதுல 8 சீட் ஜெயிச்சோம்.. 2021-ல் 25 சீட் கொடுத்தாங்க 18 தொகுதிகளில் ஜெயிச்சோம்.. 2024-லில் சீட்டை குறைக்க பார்த்தாங்க.. அப்புறமா அதே 9 சீட் கொடுத்தாங்க.. 9 தொகுதியிலும் ஜெயிச்சோம்.. இந்த முறையும் சீட்டை குறைச்சு தர திமுக நினைக்கலாம்.. நாம 25-க்கு குறைவாக இல்லாம கூடுதலான சீட் கேட்டு வாங்கனும்”னு அழுத்தமாக சொன்னாராம்..

அத்துடன் டெல்லி மேலிடம் விஜய்யுடன் கூட்டணிக்கான மூவ்வில் இருக்கிறதா என்பது பற்றி தெரிஞ்சுக்க சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ரொம்பவே ஆர்வம் காட்டி இருக்காங்க.. கார்கேவும் ராகுல் காந்தியும், “இப்ப இருக்கிற கூட்டணியை தாண்டி வேற சிந்தனையே இல்லை”ன்னு போகிற போக்குல ‘நறுக்கு’ன்னு பதில் சொல்லி அனுப்பிவிட்டாங்கய்யா.. இதுல ‘இலவு காத்த கிளியாக’ விஜய் கூட காங்கிரஸ் கூட்டணின்னு கிளப்பிவிட்ட ‘கதர் தலைகளுக்கு’ ரொம்பவே நோஸ் கட்டாகிடுச்சாம்.

வெரி இன்ட்ரஸ்டிங்தான்.. செந்தில் பாலாஜிக்கு சிஎம் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராமே?

ஆமாய்யா.. சிஎம் நடத்துற ஒன் டூ ஒன் சந்திப்புல சூலூர், கிணத்துகடவு, வால்பாறை திமுக நிர்வாகிகள் கலந்துகிட்டாங்க..

இந்த மீட்டிங்குலதான் செந்தில் பாலாஜிகிட்ட, “இந்த முறை கோவை மாவட்டத்துல இருக்கிற அத்தனை தொகுதியிலும் நாம ஜெயிச்சே ஆகனும்”னு சிஎம் சீரியசாக சொல்லி இருக்கிறார்.

சிஎம் இப்படி சொல்ல காரணம் இருக்கனுமே?

ஆமாம்.. செந்தில் பாலாஜி தமக்கு நெருக்கமானவங்ககிட்ட” கோவையில நிச்சயமாக 3 தொகுதிகளில் ஜெயிச்சுடுவோம்.. நம்ம மாவட்டத்துல பொதுவாகவே நம்மகிட்ட சரியான வேட்பாளர்களே இல்லைங்கிறதுதான் பிரச்சனை.. அதிமுகவுல இருந்து சிலரை தூக்கிட்டு வந்து சீட் கொடுத்துதான் மேனேஜ் செய்யனும்போல” என பேசியிருந்தாராம்.. அந்த தகவல் சிஎம்-க்கு போனதால, “கோவையில எல்லா தொகுதிகளிலும் கண்டிப்பாக ஜெயிச்சே ஆகனும்”னு சீரியஸாக உத்தரவு போட்டிருக்கிறாராம் சிஎம்… அதனால கோவையில இனி அதிரிபுதிரி ஆட்டத்துக்கு பஞ்சமிருக்காது என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share