கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளை வெளியிடாவிட்டால் ‘காங்கிரஸ் என்னை தொலைச்சு எடுத்துடும்.. உரிமையோட’ என்று முதல்வர் ஸ்டாலின் பேசியது கவனம் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பிப்ரவரி 25-ந் தேதி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, “ உங்க மாவட்டத்துக்கு வந்துட்டு உங்களுக்குப் புது அறிவிப்புக்களை வெளியிடாமல் போனால் நல்லா இருக்குமா? மேடையில் இருப்பவங்க சும்மா இருப்பாங்களா? அதுவும் காங்கிரஸ் கட்சியைக் கேட்க வேண்டாம். என்னை தொலைச்சு எடுத்துடுவாங்க.. உரிமையோட. அதையெல்லாம் உணர்ந்து குமரி மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புக்களை வெளியிடுகிறேன்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக- காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்டு வருகிறது; ஆனால் முதல்வர் ஸ்டாலின், கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குறைக்க வேண்டிய நிலை இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தருணத்தில் ‘காங்கிரஸ் தொலைச்சு எடுத்துடுவாங்க உரிமையோட’ என ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
