ADVERTISEMENT

”தமிழ்நாடு யாருடன் போராடும்?” : ஆளுநர் கேள்விக்கு ஸ்டாலின் பதிலடி!

Published On:

| By Pandeeswari Gurusamy

CM MK Stalins response to Governor RN Ravi

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202வது அவதார தினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலார் பூங்காவில் இன்று (அக்டோபர் 5) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, “நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆளுநருக்கு, தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு யாருடன் போராடும்?” என ஆளுநர் கேட்டுள்ளார்.

இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!

ADVERTISEMENT

அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!

ADVERTISEMENT

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!

ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை – தொழில் வளர்ச்சியை – வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!

ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!

உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!

Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!

நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!

நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!

இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share