என்ன சாப்பிட வேண்டும் என முடிவு செய்ய இவர்கள் யார்? – பிரதமருக்கு முதல்வரின் கேள்விகள்

Published On:

| By Pandeeswari Gurusamy

நாகர்கோவிலில் இன்று தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், நான் வெளிப்படையாகவே பாஜகவினரைக் கேட்கிறேன். எப்போதாவது தான் நீங்கள் வன்முறையை விட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் தாழ்த்தி வீழ்த்த வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஏனெனில், வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலத்தில் பாஜக இருக்காது. பாஜக இருந்தால் வளர்ச்சி இருக்காது. கன்னியாகுமரி மாவட்டம் என்பது எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரக்கூடிய மாவட்டம். ஆனால் நாடு முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இந்தியா முழுவதும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்ட்ராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மணிப்பூர் இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அசாமில் இன்னும் மோசமான நிலை. அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் தான் வகிக்கக்கூடிய பொறுப்பையும் மாண்பையும் மறந்து, முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பை கக்குகிறார்.

பீகாரில் துணை முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? பள்ளிக்கூடங்களுக்கு பக்கத்தில் இறைச்சிக் கடைகள் இருந்தால் அகற்றுவோம் என்று பேசி இருக்கிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? இப்படி ஒரு நிலையைத் தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விடத்தான் அவர்கள் தவியாக தவிக்கிறார்கள். ஆனால், நமது திராவிட மாடல் ஆட்சியில் மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுகிறது. வக்ஃபு திருத்த சட்டம், CAA உள்ளிட்டவற்றை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

ADVERTISEMENT

சிறுபான்மையினர் பாதுகாப்பாக இங்கே இருக்கிறார்கள். பெரும்பான்மையினர் சகோதர உணர்வோடு இருக்கிறார்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். வரலாற்றில் இல்லாத எண்ணிக்கையாக நான்காயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இந்தப் பகுதியைச் சார்ந்த நம் பால பிரஜாபதி அடிகளார் நமது முதலமைச்சருக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை. மொழி இருக்கிறது, இனமும் மானமும் இருக்கிறது. இது ஒரு பொற்காலம் என்று பேசியிருக்கிறார். வள்ளலாரின் அன்பர்கள் பாராட்டுகிறார்கள். உண்மையான ஆன்மீகப் பெரியோர்கள் பாராட்டுகிறார்கள். இதுதான் பாஜகவுடைய கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

நான் வெளிப்படையாகவே பாஜகவினரைக் கேட்கிறேன். எப்போதாவது நீங்கள் வன்முறையை விட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்களா? எப்போதான் வெறுப்பையும் பிரிவினை விதைக்கும் முயற்சிகளை நிறுத்திட்டு தமிழ்நாட்டுக்கு நல்ல விஷயம் பற்றி பேசப் போகிறீர்கள், யோசிப்பீர்கள்? தொடர்ந்து தமிழகத்தைக் குறை சொல்லிட்டுப் பேசுறீர்கள். அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளும் எந்த மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக ஆளப்படுகிறது?

ADVERTISEMENT

தமிழ்நாட்டுக்கு வர இருக்ககூடிய பிரதமர் நமது கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டு மீனவர்களுக்காக எடுத்த நடவடிக்கை என்ன?

இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்? இதைத் தீர்த்து வைப்பேன் என்று சொல்லிட்டு தான் 12 வருடங்களுக்கு முன்பு உறுதிமொழி கொடுத்து வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்கள். வெளியுறவுத் துறையும் கடற்படையும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share