“வளர்ச்சினு சொன்னா மதுரை மக்கள் வரவேற்பாங்க. அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், பொடனியிலே அடிச்சு விரட்டுவாங்க” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சில கட்சிகள், திருப்பரங்குன்றம் பிரச்சனையை கிளப்புவது ஏன்? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இது அரசியல் லாபங்களுக்காக சமூகத்தைத் துண்டாடுகிற செயல், இதில் ஒரு போதும் ஆன்மீகமே இல்லை. மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதுதான் உண்மையான ஆன்மிகம். ஆனால் சமூகத்தை துண்டாடும் சதிச் செயல்களில் ஈடுபடுவது நிச்சயமாக ஆன்மீகம் அல்ல. அது அரசியல். அதுவும் கேடுகெட்ட மலிவான அரசியல்.
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக எங்கு, எப்போது தீபம் ஏற்றப்பட வேண்டுமோ, இந்த ஆண்டும் சரியாக, முறையாக அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதை உண்மையான ஆன்மீக மக்கள் வணங்கி சென்றுள்ளனர்.
இதில் குழப்பம் ஏற்படுத்தியவர்களை மக்கள் கண்டு கொண்டுள்ளனர். ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக, தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண். மதுரை மக்கள் ஊருக்கு வருகின்றவர்களை நன்றாக வரவேற்பார்கள், வளர்ச்சினு சொன்னா மதுரை மக்கள் வரவேற்பாங்க. அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், பொடனியிலே அடித்து விரட்டுவாங்க. நீங்க எப்படி பந்துவீசினாலும் தமிழ்நாடு சிக்ஸர் அடிக்கும்.
அனைத்து மதத்தினரும் அங்காளி, பங்காளியாக பாசத்துடன் பழகும் மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன்.. தமிழ்நாட்டில் என்றைக்கும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம்தான் ஒளிரும். அமைதியின் பங்கம் நிற்கிற மதுரை மக்களுக்கு என்னுடைய நன்றிகள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
