இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர்.
இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.