திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெறும் அரசு விழாவில் ரூ.2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,66,194 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை மாவட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- திருவண்ணாமலை மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.631 கோடி செலவிலான 314 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- ரூ.63 கோடி மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1400 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் ரூ.12 கோடி செலவில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடம்
- திருவண்ணாமலை மாநகரில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்
- ரூ. 32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய காய்கறி, பூ மற்றும் பழச் சந்தை வளாகம்
- ரூ.55 கோடி செலவில் திருவண்ணாமலை மாநகரத்திற்கான குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள்,
- கஸ்தம்பாடியில் ரூ.22 கோடி செலவில் இலங்கைத் தமிழர்களுக்கான 280 புதிய வீடுகள்ர்
- -ரூ.56 கோடி செலவில் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதிகள், போளூர், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூர், நாரையூர், மாமண்டூர், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் கண்ணமங்கலம், மடம், ஆணைபோகி ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலக கட்டடம், புதிய ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள் உள்ளிட்டவைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
