பாஜகவின் பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நொடிக்கு ஒரு முறை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் திமுக எம்பி மணியின் இல்ல திருமணத்தில் இன்று (நவம்பர் 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “நாம் எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் SIR என்ற திட்டத்தை மையப்படுத்தி சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய சதி செயலை தேர்தல் ஆணையம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதை தடுப்பதற்கான முயற்சியாக அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அப்போது உரையாற்றியுள்ள அனைவரும் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி பேசி உள்ளனர். அதற்கு உரிய அவகாச காலத்தை கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில் தான் அதைச் செய்ய வேண்டும்.
அப்படி இல்லாமல் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய இந்த சூழலில் முழுமையான திருத்தப் பணிகளை செய்ய தேர்தல் ஆணையம் நினைக்கிறது.
இது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். அதைத்தான் பீகார் மாநிலத்தில் செய்தார்கள். இப்போது மற்ற மாநிலங்களில் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பீகாரில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்ட போது தொடக்க காலத்திலேயே தமிழகத்தில் முதல் எதிர்ப்பு குரலை நாம் பதிவு செய்துள்ளோம்.
மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி மற்றும் பீகாரின் இளம் சிங்கமான தேஜஸ்வி உள்ளிட்டோர் SIR க்கு எதிராக அம்மாநிலத்தில் பெரிய புரட்சியை செய்தார்கள். அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதற்குரிய விளக்கத்தை சொல்லவில்லை.
பீகாரை போல தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் பங்கேற்கவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் சந்தேகம்
எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி இதில் கூட இரட்டை வேடத்தை காட்டி உள்ளார். பாஜகவிற்கு பயந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார். அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஆனால் அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தான் பாஜகவின் உடைய பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நொடிக்கு ஒரு முறை அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
பாஜக எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். தமிழகத்தில் பாஜகவின் திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை. இதனால் நம் மீது இருக்கக்கூடிய ஆத்திரத்திலும், வன்மத்திலும் பிரதமர் மோடி பீகாரில் சென்று வெறுப்பு பேச்சை பேசி இருக்கிறார். பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழகத்தில் வந்து பேசக்கூடிய தைரியம் அவருக்கு இருக்கிறதா? யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், எவ்வளவு போலி செய்திகளை அவர்கள் உருவாக்கினாலும் 2026 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்” என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
