உத்தமராக பாஜக வாஷிங் மெஷினில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குதித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் இன்று (அக்டோபர் 3) புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட ரூ.738 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத ஒன்றிய நிதி அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை குழு அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் உடனடியாக அனுப்புகிறார்கள் என்றால்
தமிழ்நாட்டின் மேல் இருக்கும் அக்கறையால் இல்லை. இங்கு தான் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இதைவைத்து ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா.. இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா.. உருட்டலாமா.. என்று பார்க்கிறார்கள்.
யாருடைய இரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கம் ஒட்டுண்ணியாக பாஜக இருக்கிறது. மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படும் ஒன்றிய பாஜகவுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவும் கூட்டணி வைத்துக்கொண்டு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள்.
பாஜகவை அதிமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை உள்ளதா? பொது காரணங்கள் உள்ளதா? மக்கள் அடிப்படையில் ஏதாவது உள்ளதா? குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதாவது உள்ளதா? எதுவும் இல்லை. தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி தங்களது தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாஷிங் மெஷின் தான் பாஜக.
அந்த வாஷிங்மெஷினில் குதித்து உத்தமராகி விடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், கூட்டத்திற்கு கூட்டம்.. மேடைக்கு மேடை.. தெருவிற்கு தெரு சென்று கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார்கள்.
அவரும் மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் திட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நலங்களையும், தமிழக மக்கள் மேல் உண்மையான அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள். நாட்டு மக்களை துண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கைகளை முழு வீச்சில் செயல்படுத்தி கொண்டிருக்கும் அரசியல் முகம்.. அதிகார பலம்தான் பாஜக. அதிலும் மூன்றாவது முறை மக்களுடைய ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு ஆர் எஸ் எஸ் பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்துள்ளது பாஜக.
பெருந்தலைவர் காமராஜரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டில் அவர்களின் செயல் திட்டத்தை வேகப்படுத்தி இருக்கிறார்கள் வரலாறு முழுவதும் இவர்களின் கொள்கை செயல்திட்டங்களுக்கு எதிராக நின்று தமிழ்நாட்டு மக்களை காக்கின்ற நம்முடைய பணி அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 விலும் தொடரும் என்றார்.