பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110- விதியின்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு மே18-ம் தேதி 67 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கி நடைபெற்றன.

ADVERTISEMENT

தமிழகத்தில் இரும்பின் தொன்மையைப் பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப் பண்பாட்டின் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியர்களின் துறைமுகமான கொற்கை ஆகிய பகுதிகளில் கிடைத்த அரிய தொல்பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் நோக்கில் இந்த பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

இந்த வளாகத்தில் அறிமுகக் கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டிட தொகுதிகள் 54,296 சதுரஅடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிட தொகுதிகளும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இங்கு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகங்கள் சேகரிப்பிலிருந்து அலெக்ஸாண்டர் ரீ என்பவரால் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கற்கருவிகள், சங்கினாலான பொருட்கள் தயாரித்தல், இரும்பு உருக்குதல் போன்ற அறிவியல் – தொழில்நுட்ப முறைகளும், நீர் மேலாண்மை, வணிகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று நெல்லைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இன்று பொருநை அருங்காட்சியம் குறித்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share