ஆம்னி பேருந்து வேலை நிறுத்தம் : வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள்.. முதல்வர் தீர்வு காண வேண்டுகோள்

Published On:

| By Pandeeswari Gurusamy

CM appeals for solution to Omni bus strike issue

கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சாலை வரி தனியாக விதிக்கப்படுவதை கண்டித்து, ஆம்னி பேருந்துகள் 4 நாட்களாக இயக்கப்படாமல் உள்ள சூழலில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து கடந்த 7ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறை பிடித்து 70 லட்சத்திற்கு மேல் அபராதம் விதித்தது. இதேபோல் சில தினங்களுக்கு முன் கர்நாடக போக்குவரத்து கழகமும் தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட பேருந்துகளை தடுத்து ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்குவதை நிறுத்தி வைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கோவை மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று (நவம்பர் 12) கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, “சாலை வரி தொடர்பாக வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வரும் நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. அரசின் கவனத்திற்கு பிரச்சனைகள் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கோவையில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வில்லை.

ADVERTISEMENT

வெளி மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் வரி வசூல் செய்ய ஆரம்பித்ததால் , பிற மாநிலங்களிலும் இதே போல தமிழக பேருந்துகளுக்கு அந்தந்த மாநிலங்களில் வரி வசூல் செய்கின்றனர். கேரளாவிலும், கர்நாடாவிலும் லட்ச கணக்கான ரூபாய் வரை வரி விதிக்கின்றனர்.

ஆல் இன்டியா பர்மிட் வாங்கி இருக்கும் நிலையில் , 90 நாளைக்கு பர்மிட் இருக்கிறது. ஆல் இந்தியா பர்மிட்டிற்கு வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றது.

ADVERTISEMENT

தமிழகத்தில் முதலில் வரி வசூல் செய்வதால்,மற்ற மாநிலங்களிலும் வரி வசூல் செய்கின்றனர். ஆனால் வட மாநிலங்களில் இது போன்ற பிரச்சினை இல்லை. அதேசமயம் எங்களால் இவ்வளவு தொகை வரி செலுத்தி வாகனம் இயக்க முடியாது என்றனர்.

தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு இயக்கவில்லை. அதேபோல் அங்கிருந்தும் இங்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் துவங்கி நான்கு நாட்கள் ஆகிய நிலையில், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.

கோவையில் மட்டும் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

அரசு நிறைய சலுகைகளை ஆம்னி பேருந்துகளுக்கு செய்து இருக்கிறது. பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறது . தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து இருக்கின்றது. இந்த சாலை வரி பிரச்சினையையும் அரசு சரி செய்து கொடுக்க வேண்டும்.

நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்வு கிடைக்காது என்பதால்தான் அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம். அரசு நல்ல முடிவு சொல்லும் வரை பேருந்துகளை வெளி மாநிலங்களுக்கு இயக்க போவதில்லை.

பண்டிகை காலத்தில் நிலையான கட்டணம் என எதுவும் நிர்ணயிக்க வில்லை. ஒரு சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்து விடுகின்றனர். அதையும் சங்கத்தின் மூலம் கட்டுப்படுத்தி வருகிறோம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடியான நல்ல தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share