செருப்பு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மவுனம் கலைத்து பேசியுள்ளார்.
கடந்த அக்டோபர் 6ம் தேதி காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, விசாரணை மேற்கொண்டு இருந்தபோது 71 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீசினார். ஆனால் அந்த செருப்பு தலைமை நீதிபதி மீது படவில்லை. அவரது இருக்கையில் பட்டு கீழே விழுந்தது.
இதையடுத்து ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தேசிய அளவில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தரப்பினரும் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழலில் தன்னை நோக்கி செருப்பு வீசப்பட்டது தொடர்பாக வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பேசியுள்ளார்.
நீதிபதிகள் உஜ்ஜல் புயன் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தது.
அப்போது, பேசிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், என்னை நோக்கி வழக்கறிஞர் செருப்பு வீசிய சம்பவத்தால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அது முடிந்து போன ஒன்று. மறக்கப்பட வேண்டிய நிகழ்வாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
நீதிபதி உஜ்ஜல் புயன் கூறுகையில், தலைமை நீதிபதி நோக்கி செருப்பு வீசப்பட்டுள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.