அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குடும்பத்தில் ’சித்தப்பா’ விவகாரம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த தலைவராக இருந்த நிலையில் அவரது அண்ணன் மகன் செல்வன் கடும் அதிருப்தியில் இருந்தார். இதனால் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்தார்.
செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் காளியப்பனின் மகன்தான், செல்வன். குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கான திமுக பொறுப்பாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அப்போது, திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார் செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வன்.
செங்கோட்டையன் மீது பல்வேறு மோசடி புகார்களை கூறி வரும் செல்வன், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 21) கோபி செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுத்தார். அதேபோல கோபி தொகுதியில் தமக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டும் மனு தந்தார் செல்வன்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வன், செங்கோட்டையன் குடும்பத்தின் ‘சித்தப்பா’ விவகாரத்தை பற்றி விவரித்தார்.
சென்னை செய்தியாளர்களிடம் பேசிய செல்வன், 1977-ம் ஆண்டு எனது சித்தப்பா செங்கோட்டையன், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1980-ம் ஆண்டு எனது சின்ன தாத்தா- அதாவது செங்கோட்டையனின் சித்தப்பா (கே. எம். சுப்ரமணியம்) திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் சீட் வாங்கி போட்டியிட்டார். அப்போது, தன்னுடைய சித்தப்பாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே சத்தியமங்கலம் தொகுதியை விட்டுவிட்டு கோபிசெட்டிபாளையம் தொகுதியை அதிமுக தலைமையிடம் கேட்டு வாங்கி போட்டியிட்டார் செங்கோட்டையன்.
1980-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் தமது சொந்த சித்தப்பாவை கோபி தொகுதியில் தோற்கடித்தார்.
அதேபோல, கோபி தொகுதியில் எனக்கு அதிமுக தலைமை வாய்ப்பு கொடுத்தால் தவெக வேட்பாளராக போட்டியிட இருக்கும் என்னுடைய சித்தப்பா செங்கோட்டையனை எதிர்த்து போட்டியிட்டு 60,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
செங்கோட்டையன், த.வெ.க. என்ற கட்சிக்கு சென்றுள்ளார். த.வெ.க. தற்போது சினிமா சூட்டிங் நடத்தி கொண்டிருக்கிறது. இந்த சூட்டிங் அனைத்தும் 2026-ல் முடிவடைந்துவிடும். அதோடு விஜய் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார். செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் அவர்களது கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவின் கோட்டையான மேற்கு மண்டலத்தில் வந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என விஜய் கூறியிருப்பது வேடிக்கைக்குரியது என்றார் செல்வன்.
