தந்தையின் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் திண்டாடிய 4 குழந்தைகள் – நெகிழ வைத்த கிராம மக்கள் – முதல்வர் ஆறுதல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Children who don't have money for father's funeral

சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் குழந்தைகள் தவித்த நிலையில் பணம் வசூலித்து கிராம மக்கள் உடலை அடக்கம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்த முதல்வர் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்னார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை என்ற கிராமம் உள்ளது. இங்கு கூலித் தொழிலாளியான கமலக்கண்ணன் – வசந்தா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு லாவண்யா, ரீனா, ரிஷிகா என மூன்று மகள்களும், அபினேஷ் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பே உடல் நல குறைவால் வசந்தா இறந்து விட்டார்.

ADVERTISEMENT

கமலக்கண்ணன் கூலி வேலை செய்து குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். சிகிச்சையின் போது கமலக்கண்ணனுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்நோய் நோயாளியாக கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் கமலக்கண்ணனின் வருமானம் இல்லாததால் குடும்ப வறுமை காரணமாக இன்ஜினியரிங் படித்து வந்த அவரது மூத்த மகள் லாவண்யா படிப்பை கைவிட்டார். அதேபோல் எட்டாம் வகுப்பு படித்து வந்த ரீனா, பத்தாம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.

ADVERTISEMENT

அபினேஷ் மட்டும் பூட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் நான்கு குழந்தைகளும் பரிதவித்தனர்.

இதைக் கண்ட கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து பணம் வசூல் செய்து கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த கமலக்கண்ணனின் 4 குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தார். மேலும் நிறுத்தப்பட்ட படிப்பை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share