நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் தங்களது பணியுடன் இந்த வேலையையும் சேர்த்து செய்வதால் பணி சுமையில் உள்ளனர்.
இந்தசூழலில அரசு ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.
வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான FERA நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் புறக்கணிக்கப்படும் என்று அறிவித்தது.
அதுபோன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைபடுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப்பெற்றிட வேண்டும், புற ஆதாரம் & ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும், நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,. ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வட்டம், குறுவட்டம் நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (நவம்பர் 18) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
மற்றொரு அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ, கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவிகிதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வழக்கமான பணிகளும், எஸ்.ஐ.ஆர் பணிகளும் பாதிக்கப்படக் கூடும்.
இந்தசூழலில் மருத்துவ காரணமின்றி வேறு எதற்காவது நாளை அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளார்.
