அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், ‘அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நயன்தாராவை குறிப்பிட்டு சிவி சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். திண்டுக்கல் சீனிவாசன், ‘சேலை கொடுத்தால் போதுமா? பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது?’ என அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார்.
இவர்களது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இதனை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (மார்ச் 18) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?
எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் – செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
