ராஜன் குறை
கரூரில் நிகழ்ந்த பெரும் துயரச் சம்பவத்தை, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை மிகச் சிறப்பாக, பொறுப்புடன் கையாண்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர். அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன என்று அனைவருக்கும் இலக்கணம் வகுக்கும் விதமாக அவர் செயல்பாடு அமைந்துள்ளது. செய்தி அறிந்ததும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரை, அருகமை மாவட்ட அமைச்சரை நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை, சிகிச்சைகளை மேற்பார்வையிடச் சொன்னார். சுகாதாரத் துறை அமைச்சரையும் விரையச் சொன்னார். நிலைமையின் தீவிரம் தெரிந்ததும் தானே நள்ளிரவில் விரைந்து சென்றார். அஞ்சலி செலுத்தினார்; ஆறுதல் கூறினார்.

விபத்திற்குக் காரணமான தவெக தலைவர் நடிகர் விஜய், அவரைக் காண வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க முயலாமல், விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தபோது, முதல்வர் கரூர் செல்ல விமானம் ஏறினார். முதல்வர் ஒரு வார்த்தை கூட மக்கள் கூடக் காரணமான, விபத்திற்குப் பிறகு களத்தில் நிற்காத தமிழக வெற்றிக் கழகம், அதன் தலைவர் விஜய் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. உடனடியாக மேனாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தார். அதன் அறிக்கை கிடைத்த பிறகு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.
திராவிட இயக்க எதிரிகள் உடனே சதிக் கோட்பாடுகளைப் புனைந்தனர். சற்றுக் கூட கூச்சமே இல்லாமல் தி.மு.க கலவரத்தைத் தூண்டியது என்றனர். காவல்துறை வேண்டுமென்றே கூட்டம் நடந்த இடத்தைக் கொடுத்தது, விபத்தைத் தடுக்கவில்லை என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர். ஆனால் முதல்வர் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பதிலுக்கு பிறரைக் குற்றம் சாட்டவில்லை. மாறாக எந்த தலைவரும் மக்கள் இப்படி பாதிக்கப்படுவதை விரும்ப மாட்டார் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களையும் மரியாதைப் படுத்தினார்.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் பதட்டம் உருவாகக் கூடாது என்ற வகையில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பல விவரங்களை, காணொளிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விஜய் கடுமையாக விமர்சித்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து யதார்த்தமாக நடந்தவற்றை விளக்கினார். விஜய் தன்னைப் பற்றி பேசும் முன்பே கூட்ட த்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததை காணொலிகள் மூலம் விளக்கினார். கூட்ட த்தில் நெரிபட்ட தொண்டர்களே விஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கவனத்தைக் கவர செருப்புகளை வீசியதை விளக்கினார். அவருக்கு எந்த பதட்டமும், குழப்பமும் இல்லை. உணர்ச்சி வசப்படவில்லை. மிகுந்த பொறுப்புடன் பேசினார்.
இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிச்சயம் பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்பதால் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும், நிர்மல் குமார் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கூறிய வழக்குகள், பொதுநல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை ஆதலால் அவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களாக முன்வந்து வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை.

நடிகர் விஜய் சென்னையில் கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இரண்டு தினங்கள் கழித்து சில நிமிடங்கள் பேசி ஒரு காணொளி மட்டும் வெளியிட்டார். அதில் அவர் சமூக நாகரீகம் கருதி ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை. தனக்குள்ள பொறுப்பை ஏற்கவில்லை. முதல்வரை விளித்து பழிவாங்க வேண்டுமென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக சவால் விடுத்தார்.
இத்தனை உயிரிழப்பிற்கு அவர் நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்பதால் அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் கூறினர். கைது செய்யாததற்காக முதல்வரைக் கண்டித்தனர். ஆனாலும் முதல்வர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆணையத்தின் அறிக்கை விஜய் பொறுப்பாளி என்று கூறினால் பிறகு வழக்குத் தொடர்ந்தால் போதும் என்ற நிலையில் அவரைக் கைது செய்து பிறகு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை; அதனால் இந்த துயர நிகழ்வு அரசியல் மயமாவது தேவையில்லை என்று அமைதி காத்தார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டாமல், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் தடுப்பதே முக்கியம் என்று அறிவித்து தன் தலைமையின் மாண்பினை, அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்ட தன் பதவியின் கெளரவத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.
தமிழக வெற்றிக் கழகமும், நடிகர் விஜயும் இந்த சிக்கலை எளிதில் கடந்திருக்க முடியும். இந்த நிகழ்விற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு, காவல்துறை ஒத்துழைப்புடன் பாதிக்கப் பட்டவர்களை சென்று பார்த்திருந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தால் அவர்கள் இப்படி முடங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் நோக்கமே எப்ப டியாவது அரசின் மீதும், ஆளும் கட்சி மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதாகவே இருந்ததால் அவர்களால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள முடியவில்லை. நீதி மன்றத்திலும், பொது மன்றத்திலும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்து அம்பலப்பட்டு நிற்க நேர்ந்திருக்கிறது.
தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், நேரலையில் தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பிய காட்சிகள் யாவும் விபத்து எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ளும் விதமாகத்தான் உள்ளன. ஆம்புலன்ஸ் சதி, மின்சார துண்டிப்பு சதி, தடியடி, செருப்பு வீச்சு சதி என அனைத்துக் கற்பிதங்களையும் காணொளிக் காட்சிகள் பொய்யாக்குகின்றன. விஜய் தாமதமாக வந்தது, தன் வாகனத்திற்குப் பின்னால் ஒரு மக்கள் திரளைத் திரட்டி தன்னை சந்திக்கக் காத்திருந்தவர்களுடன் கலக்க விட்டு நெரிசலை ஏற்படுத்தியது ஆகியவையே இந்த விபத்து நிகழ முக்கியக் காரணங்கள் என்பதைக் காணொளிகளைப் பார்த்து அறிய முடிகிறது. இதை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்துக் கடப்பதுதான் நேர்மை என்பதைவிட அதுவே சுலபமானதும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக அரசை, ஆளும் கட்சியை குறை கூறி தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

பாரதீய ஜனதா கட்சியின் தொடரும் சதி லீலைகள்
முதல்வர் ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி இப்போதுதான் வெளிப்பட்டது என்பதல்ல. தி.மு.க 2016 தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே சட்டமன்றப் பெரும்பான்மையை தவற விட்டது. அடுத்த ஆண்டே ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது ஸ்டாலின் கட்சித்தாவல்களை ஊக்குவித்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுதான் ஆட்சியமைப்பேன் எனத் தெளிவுடன் இருந்தார்.
ஜெயலலிதா நோயுற்றபோதே முதல்வர் பொறுப்பை வகித்து வந்த, அவர் மறைந்தவுடன் முறையாகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமும் சரி, பின்னர் அவர்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த சசிகலா அம்மையாரும் சரி, பாரதீய ஜனதா கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராகத்தான் இருந்தனர். அரை நூற்றாண்டு வரலாற்றில், தி.மு.க மாநில அடையாளத்தில், அதன் சுயாட்சியில் மையம் கொண்டும், அ.இ.அ.தி.மு.க அகில இந்திய அடையாளத்தை அதிகம் அனுசரித்தும், ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதாகவும் விளங்கி வந்துள்ளதை கவனமாக ஆராய்ந்து அறியலாம். இப்படியெல்லாம் இருந்தும் அ.இ.அ.தி.மு.க கட்சியைப் பிளக்க முனைந்தது பாஜக.
ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் துவங்கும்படி நான்தான் கூறினேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் பாஜக-வின் முக்கிய ஆலோசகர் குருமூர்த்தி. ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜகவும் ஒத்துழைத்தது. சசிகலா பதவியேற்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் தினகரனும், சசிகலாவும் கூவாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாத்து ஒ.பி.எஸ் கலகத்தை முறியடித்தனர். உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கிடந்த தீர்ப்பு அந்த நேரம் வெளியாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சிறை சென்றார் சசிகலா.
அடுத்த காட்சி ஆர்.கே.நகர் தேர்தல். அதில் டி.டி.வி.தினகரன் போட்டியிட, வெற்றிபெற்றால் அவர் முதல்வராகும் வாய்ப்பு தெரிந்தது. அதை பாஜக விரும்பவில்லை என்பதால் தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டது. அப்படியும் அவர் வென்றுவிட அவர் ஆதரவாளர்களான 18 ச.ம.உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அவர்கள் தடாலடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஓ.பி.எஸ்ஸின் 11 ச.ம.உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமியுடன் இணைத்து, தினகரனை வெளியேற்றி புதிய ஏற்பாட்டைச் செய்தது பாஜக. இதையும் ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாகக் கூறினார். பிரதமர் கூறித்தான் நான் இணைந்தேன் என்றார்.
இதில் முக்கியமானது என்னவென்றால் இத்தனை குழப்பத்திலும், ஒரு பிரிவு அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தான் ஆட்சியமைக்கலாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் முயலவேயில்லை. அமைதி காத்தார். கலைஞர் மறைந்து அவர் தலைமைப் பொறுப்பேற்றதும், பாஜக-வை எதிர்த்து திராவிட சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதுதான் தன் அரசியல் என்று அறிவித்தார். இன்று வரை அந்தக் கொள்கையில் திடமாக இருக்கிறார்.
“தமிழகம் போராடும்” என்று முழுங்கினால் யாரை எதிர்த்து போராடும் என்று கேட்ட ஆளுனருக்கு, அருமையான பதிலைக் கொடுத்துள்ளார். எதையெல்லாம் எதிர்த்து போராடும் என்ற பட்டியலில் கல்வியில் மூட நம்பிக்கைகளை புகுத்தி நூறாண்டுகள் பின்னே செல்ல சதி செய்யும் பாஜக-வை எதிர்த்து போராடும் என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளார்.

மதவாத, பிற்போக்குவாத அரசியல் எதிர்ப்பு என்ற அடிப்படையில் அவர் உருவாக்கிய கூட்டணி இரண்டு மக்களவை தேர்தல்களிலும், ஒரு சட்டமன்ற தேர்தலிலும், உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிக் கட்டிக்காத்த திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் தன்னுணர்வை தன் தலைமையில் பன்மடங்கு வளப்படுத்தி, திராவிட மாடல் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற ஒரு கருத்தியலை நிலைநிறுத்தியுள்ளார்.
எதிர்முனையில் அ.இ.அ.தி.மு.க-வை எவ்வளவு பிளந்தாலும் தாங்கள் அதன் இட த்தைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த பாஜக இப்போது நடிகர் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க விரும்புகிறது. கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து கண்ணீரின் ஈரம் காயும் முன்னரே, விஜய் தேசிய ஜன நாயக க் கூட்டணிக்கு வரவேண்டும், அவருக்கு வேறு வழியில்லை என்று பாஜக ஊடகப் புலிகள் முழங்கத் துவங்கிவிட்டனர். அது மட்டும் நடந்துவிட்டால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற கற்பனை அவர்களை பரவசப்படுத்துகிறது.
உடனே தேசியத் தலைமையும் முன்னாள் நடிகர் ஹேமாமாலினி தலைமையில் அனுராக் தாகூர் என்ற டில்லி கலவர புகழ் அமைச்சரை உள்ளடக்கி உண்மையைப் புனைந்து கூற கரூருக்கு அனுப்பியது. அவர்கள் என்ன முயன்றும் பெரிதாக எதுவும் கதைகட்ட முடியவில்லை. ஆனாலும் பாஜக பேச்சாளர்கள், முன்னாள் நடிகை குஷ்பு போன்றவர்கள், தொடர்ந்து ஏதேனும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை, சதிக்கோட்பாடுகளைப் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை மிகவும் வினோதமாக இருக்கிறது. ஒருபுறம் பிளவு வேலைகள், சூழ்ச்சிகள் எதையும் செய்யாமல் தன் கொள்கைப் பற்றின் அடிப்படையில் கூட்டணி அமைத்து, திறன் மிக்க நல்லாட்சியால் மக்கள் மதிப்பைப் பெற்று நேர்வழியில் அரசியல் செய்யும் முதல்வர் ஸ்டாலின்.
மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தன் விருப்பம் போலச் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்படும் ஆளுனர், தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்து முடக்கப்பார்க்கும் ஒன்றிய அரசு, எப்படியாவது புதிய தேசிய கல்விக்கொள்கையை திணிக்க நினைக்கும், மும்மொழிக் கொள்கையை புகுத்தத் துடிக்கும் அரசியல் மேலாதிக்க வெறி என்று இயங்கும் பாஜக.
இத்தனை செய்தும் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாமல் அ,இ.அ.தி.மு.க-வை வெட்டி, ஒட்டி, வளைத்து விளையாடியது போதாமல், இப்போது புதிதாக அந்த ஒட்டுவேலையில் நடிகர் விஜயை இணைக்கப் பார்க்கிறது பாஜக. இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி பலபடி வளைத்ததில் அவர்கள் கட்சியிலேயே பலவித குழப்பங்கள், குழுக்கள். அண்ணாமலை கட்சியை பெரிதாக வளர்த்துவிட்டார், பெரும் ஆளுமை மிக்க தலைவர் என்று வரலாறு காணாத பிம்பத்தை உருவாக்கியவர்கள், திடீரென அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக்கி விட்டார்கள். இப்போது ஸ்டியரிங்க் யார் கையில், பிரேக் யார் கையில் என்று தெரியாமல் வண்டி தடுமாறுகிறது.
பாஜக நிலையும் சிக்கல்தான். அவர்கள் கொள்கையான இந்துத்துவம் பேசி ஒருபோதும் திராவிட கருத்தியலை வெல்ல முடியாது என்பதால், இதுபோல வளைத்தல், உடைத்தல், ஒட்டல் என திருகு வேலைகளைத்தான் செய்ய முடிகிறது. யார் டில்லிக்கு போகிறார்கள், யார் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே குடியிருக்க வேண்டியிருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க அணிகள் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரன்; பாஜக அணிகள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என ஆறேழு பேர் தவிர இப்போது புதிதாக த.வெ.க விஜய் என பாஜக பொம்மலாட்டம் களை கட்டுகிறது. எதிரணியில் சுயமரியாதைப் பதாகையின் கீழ் அணிவகுத்து நிற்கிறது கொள்கைக் கூட்டணி. இப்படியொரு சமனற்ற தேர்தல் களம் சமீப காலங்களில் உருவானதே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் ஊடகங்கள் காட்சி மயக்கங்களை உருவாக்கத்தான் செய்யும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com