தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசனின் உடலுக்கு இன்று (செப்டம்பர் 25) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் பிலா வெங்கடேசன்(56). இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு இப்பகுதியில் உள்ள தையூரில் தனது இல்லத்தில் பீலா வெங்கடேசன் ஓய்வெடுத்து வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னை கொட்டி வாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
யார் இந்த பீலா வெங்கடேசன்?
பீலா வெங்கடேசன் 1969 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். வெங்கடேசன் ஐபிஎஸ்- முன்னாள் எம்எல்ஏ ராணி தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவர் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நிலையில் 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். போஜ்பூர் மாவட்ட உதவி ஆட்சியராக தனது பணியை தொடங்கிய பீலா வெங்கடேசன் மணவாழ்க்கை காரணமாக தமிழக மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியராக தமிழகத்தில் தனது பணியை தொடங்கியவர் பின்னர் தமிழக அரசின் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்தார். 1992 ஆம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் தாஸை மணந்தார். ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபியாக பணியாற்றிய நிலையில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து பீலா ராஜேஷ் 2023 ஆம் ஆண்டு அவரை பிரிந்தார். பின்னர் பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை மீண்டும் பீலா வெங்கடேசன் என்று மாற்றி கொண்டார்.
பீலா வெங்கடேசன் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.