முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த மாத இறுதியில் வெளிநாடு புறப்படுகிறார்.
தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வராக பொறுப்பேற்ற பின் 2022ஆம் ஆண்டு துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு 5 நாள் பயணமாக சென்று வந்தார். அப்போது தமிழ்நாட்டுக்கு ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் முதல்வர் மேற்கொண்ட 9 நாள் பயணத்தில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்களும், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் 9 நாள் பயணத்தின் போது ரூ.3,440 கோடி ஒப்பந்தங்களும், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் மேற்கொண்ட 17 நாள் பயணத்தில் ரூ.7,616 கோடி ஒப்பந்தங்களும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தநிலையில் ஜெர்மன், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெர்மன் செல்லும் முதல்வர் ஸ்டாலின், 31ஆம் தேதி ஜெர்மனியில் அயலக அணி நிர்வாகிகளை சந்தித்து பேசவுள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் 1ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
செப்டம்பர் 2ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தொழில்முனைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சி என அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 7ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை வந்தடையவுள்ளார்.