“முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ.10 லட்சம்” : ஸ்டாலின் வாக்குறுதி!

Published On:

| By Kavi

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான  முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு 23 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

ADVERTISEMENT

அவை,

“நலமுடன் தமிழ்நாடு 2030” என்ற திட்டத்தின்படி தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

ADVERTISEMENT

சென்னை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் இருப்பது போன்று கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மண்டல அளவில்- தஞ்சாவூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் உயர்சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். இந்த மருத்துவமனைகள் ஒவ்வொன்றின் மூலமும், சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு உயர்சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இளம் வயதினர் உயிரிழப்பிற்கும், வாழ்நாள் குறைவதற்கும் காரணமான இதய நோய்கள், நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்கள், சுவாச நோய், செரிமானம் சார்ந்த நோய்கள் உள்ளிட்ட முதன்மையான பத்து தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மண்டல அளவில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.

மண்டல அளவில் பல்நோக்குச் சிறப்பு கண் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

நடுத்தர வர்க்கத்தினர் அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகளைப் பெற, தனியார் காப்பீடு வைத்திருக்கும் மருத்துவப் பயனாளிகளும் பயன்பெறும் வகையில், காப்பீட்டுச் சிறப்புப் பகுதி விரிவுபடுத்தப்படும்.

 சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து சட்டமியற்றியவாறு அது தொடங்கப்படும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் மருத்துவமனை, சிகிச்சை அளிப்பதுடன் சித்த மருத்துவத்தை நவீனமயமாக்கும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

பாரம்பரிய மருத்துவமனை ஆவணப்படுத்துதல்: தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்த அனைத்துத் தரவுகளும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆவணப்படுத்தப்படும்.

போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தரும் வகையில், போதைப் பொருள் விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் பகிர்வதற்கு ‘போதைப் பொருள் தகவல் மையம்’ உருவாக்கப்படும்.

தீரா நோய்களால் பாதிக்கப்பட்டு நடமாட இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு ‘பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம்’ (Hospice Care) மண்டல அளவில் அமைக்கப்படும்.

மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான வசதிகள், தேவைப்படும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில், டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள நிலையில் இருந்து இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

கண்ணொளி மீட்போம்: அனைவரும் நலமான கண்பார்வையுடன் திகழ்வதை உறுதிசெய்யும் பொருட்டு,கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு உரிய கண்ணாடி வழங்கப்படும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி வரும் சூழலில் இந்த நோயின் தாக்கத்தைப் பற்றியும், நோய் வராமல் தடுப்பதற்குரிய வாழ்வியல் முறை மாற்றங்கள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டில் விற்கப்படும் இனிப்பு வகைகள், பானங்கள் ஆகியவற்றில் கலோரி மதிப்பைக் குறிப்பிட வேண்டும் எனத் தயாரிப்பாளர்களுக்கு வலியுறுத்தப்படும்.

தெருநாய்க் கடியால் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மையங்கள் தரம் உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் தற்கொலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் விதமாக ‘தற்கொலை தவிர்ப்புக் கொள்கை’ உருவாக்கப்படும்.

சிறப்பு ஆய்வகங்கள் (Advanced Diagnostic Labs): உயர்தொழில்நுட்பம் கொண்டு மேற்கொள்ள வேண்டிய அதிகச் செலவு ஏற்படும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள சிறப்பு ஆய்வகங்கள் சென்னை மற்றும் மதுரையில் முதற்கட்டமாகத் தொடங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரும் இந்த ஆய்வகங்களைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் நாட்டிற்கே ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன்பெறும் நோயாளிகளுக்கு உரிய காலணிகள் வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மனநல மருத்துவர் மற்றும் மனநல ஆற்றுப்படுத்துநர்கள் நியமிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மனநல மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும். தற்போதுள்ள வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் பொது மக்களிடையே மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மன நலன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாக மனநல மருத்துவமனை மற்றும் இதர மருத்துவமனைகளில் உள்ள மனநலப்பிரிவில் மன நோய்களுக்கான (Mental illness) சிகிச்சை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மனநல மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் ( Mental Health Promotion / Positive Mental Health), மன உளைச்சல் மேலாண்மைக்கான (Stress Management Counselling) ஆலோசனைகள் & Telecounselling Services உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக “ஒருங்கிணைந்த மனநல மேம்பாட்டு மையங்கள்” வடிவமைக்கப்படும்.

இத்தகைய மையங்கள் மூலமாக, இளம் பருவத்தினர் முதல் முதியவர்கள் வரை, அனைத்து வயதினருக்கும் தேவையான மனநல மேம்பாட்டிற்கான ஆலோசனைகள்; மன உளைச்சல் மேலாண்மைக்கான ஆற்றுப்படுத்துதல் சேவைகள்; தொலைபேசி வழி ஆற்றுப்படுத்துதல் சேவை (Tele Counselling Service) உள்ளிட்ட பல்வேறு மனநலச் சேவைகள் வழங்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் Palliative and Geriatric care பிரிவுகள் துவங்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share