நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத் தன்மையே அந்தப் பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று (ஜனவரி 26) காலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து வீர தீர செயலுக்கான பல்வேறு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்!
பரந்து பட்ட இந்தியர் எண்ணற்ற மொழிகள் இனங்கள் பண்பாடுகள் நம்பிக்கைகள் தழைக்கும் நாடு
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு
நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன் நம்பிக்கையுடன் சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.
நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத் தன்மையே அந்தப் பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.
