கரூரில் விஜய் பிரச்சாரத்தில் 38 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்று கேள்விபட்டதும், உடனடியாக தலைமை செயலகம் சென்று ஆலோசனை செய்த முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து சாலை மார்கமாக கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.
அவருடன் கே.என்.நேரு, எ.வ.வேலு, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியிலிருந்து வந்தனர். ஏற்கனவே மருத்துவமனையில் அன்பில் மகேஷ், ரகுபதி, சிவசங்கர் ஆகிய அமைச்சர்களும் இருந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் மருத்துவமனையில் உள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து கார் மூலம் 2.25 மணிக்கு கரூர் மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.
இந்தசூழலில் 3.15 மணிக்கு முதல்வரும் வருகைத்தந்தார்.
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. சில உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
உடல்களுக்கு அருகே அவர்களது உறவினர்களும் குடும்பத்தினரும் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.